Friday, 15 November 2013

அதிகரிக்கும் "போதை நுகர்வு' கலாசாரம்: மயக்கத்தில் மாணவர்கள்: இன்று "டீன் ஏஜ்' தினம்

மதுரையில் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் "போதை நுகர்வு' கலாசாரம், பெற்றோர், ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவருகிறது.

இன்று "டீன் ஏஜ்' தினம். 13 வயதிலிருந்து 19 வயது வரை, மாணவர்கள் நல்லது, கெட்டதை அறிய இயலாத இரண்டும் கெட்டான் பருவம். பெற்றோரின் பிணைப்பிலிருந்து நண்பர்களைத் தேடி, குழுவாக சேரும் பருவம். இதில், மாணவர்களின் பல்வேறு பழக்கவழக்கங்கள், அவர்களது எதிர்காலத்தையே திசைமாற்றுகிறது. நகரம், கிராமம் வேறுபாடின்றி மாணவர்கள் போதைக்கு இலக்காகின்றனர் என்கின்றனர், மதுரையைச் சேர்ந்த மனநல டாக்டர்கள்
.


ரபீந்திரநாத், துறைத் தலைவர், மதுரை அரசு மருத்துவமனை: சமீபகாலமாக, பள்ளி மாணவர்கள் "போதை நுகர்வு' கலாச்சாரத்திற்கு அடிமையாகி, பெற்றோர்களே சிகிச்சைக்கு அழைத்து வருவது அதிகரித்துள்ளது. பசை, கம், ஒய்ட்னர், தின்னர் போன்ற திரவங்களை திறந்து வைத்தால் ஆவியாகும். அதை நுகரும் போது, ஒருவித போதை உண்டாகிறது. இவற்றை தொடர்ந்து நுகர்ந்தால் கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்படும். இருதயத் துடிப்பு சீரற்று வேகமாகவும், மெதுவாகவும் இயங்கும், சிலநேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்தும். மது, சிகரெட் போன்று பெரிய குற்றமாக கருதப்படாததாலும், விலை குறைவு, எளிதாக கிடைப்பதாலும், இதன் விற்பனை அதிகரித்து வருகிறது. இவற்றை நீண்டநாட்கள் பயன்படுத்தும் போது, அதன் அளவு அதிகரிக்கும். பெற்றோரிடம் காசு கேட்டு தகராறு செய்யும் வரை, விஷயம் வெளியே தெரியாது. பள்ளியிலும் அடிக்கடி வெளியே சென்று நுகர்ந்து வருவதை வைத்து, ஆசிரியர்கள் கண்டுபிடித்து விடலாம். மாணவிகள், "லிப்ஸ்டிக், நெயில் பாலீஷ், அதன் ரிமூவர்' திரவத்தை நுகர்ந்து பார்க்கின்றனர். தவறென்று அறியாமல் பழகி, அதன்பின்னர் மீளமுடியாமல் தவிக்கின்றனர். வீட்டில் பெற்றோரிடம் ஐந்து ரூபாய் கேட்டு, ஏதாவது ஒன்றை வாங்கி நுகரும் வரை, அதன் ஆபத்து பெற்றோருக்கு தெரியாது. எனவே, கம், வொயிட்னர் போன்றவற்றை, பிள்ளைகள் அடிக்கடி வாங்கினால், உடனடியாக கண்காணிக்க வேண்டும்.

டாக்டர் தீப், குழந்தைகள் மனநலம்: இப்பொருட்களை மது, சிகரெட் போல ஒளித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லாததால், வெளிப்படையாக கர்ச்சீப்பில் வைத்து, மூக்கை சுத்தம் செய்வது போல நுகர்கின்றனர். குழந்தைகளுக்கு மனஅழுத்தம் அதிகமாகும் போது, அதற்கு வடிகால் தேவை. அதிலிருந்து விடுபட தெரியாமல், இப்பழக்கத்திற்கு அடிமையாகி, தனிமையை தேடுகின்றனர். பிள்ளைகளுக்கு பிடித்தமான இடங்களுக்கு அழைத்துச் செல்வது தான், வடிகாலாக இருக்கும். பள்ளியில் நண்பர்களுடன் என்ன செய்கின்றனர், எதற்கு பணம் கேட்கின்றனர் என்பதை கவனித்தால், இப்பழக்கத்தை தவிர்த்து விடலாம். கவனிக்காவிட்டால், காட்டமான வாசனையை தொடர்ந்து நுகரும் போது, நாளடைவில் வாசனையை நுகரும் சக்தி நிரந்தரமாக போய் விடும். எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும், என்றனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats