குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா என்ற விவரத்தை ஆன்லைனிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். இதற்கான சிறப்பு ஏற்பாட்டை டி.என்.பி.எஸ்.சி.
செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குரூப்-2 தேர்வுக்குட்பட்ட (நேர்காணல் பணிகள்) பதவிகளில் 1064 காலியிடங்களை நிரப்பு வதற்காக முதல்நிலைத் தேர்வை டிசம்பர் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டி.என்.பி.எஸ்.சி. நடத்த இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சரியான முறையில், விவரங்களை பதிவுசெய்து உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களின் விவரங்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது.
குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்கள் பதிவு எண்ணை உள்ளீடு செய்து ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான விவரத்தை சரிபார்த்துக் கொள்ளலாம்.
சரியான முறையில் விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியிருந்து அதன் விவரம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் இல்லாவிட்டால், பணம் செலுத்தியதற்கான செலான் நகலுடன் பெயர், குரூப்-2 தேர்வுக்கான பதிவு எண், விண்ணப்பம்-தேர்வுக்கட்டணம் செலுத்திய இடம் (போஸ்ட் ஆபீஸ் அல்லது இந்தியன் வங்கி), அதன் முகவரி ஆகிய விவரங்களை [email protected] என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஹால்டிக்கெட் எப்போது?
இணையதளத்தில் உள்ள விவரங்கள், விண்ணப்பம் பெறப்பட்டதற்கான ஓர் ஒப்புகை மட்டுமே.
விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு ஷோபனா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment