Wednesday, 13 November 2013

அவ்வையார் எத்தனை பேர்? கல்வித்துறை "திடுக்" தகவல்

தமிழக அரசின் ஆறாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், "இரு அவ்வையார் இருந்தனர்" என தெரிவித்துள்ளது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
சங்க காலத்தைச் சேர்ந்த, மிகச் சிறந்த பெண்பாற் புலவர், அவ்வையார். தமிழிலும், அரச நிர்வாகத்திலும், நிறைந்த அறிவைப் பெற்றவர். தமிழில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.  அறிவிற் சிறந்த அவ்வையார், நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதற்காக அவருக்கு, அதியமான் நெல்லிக்கனி கொடுத்ததும், திருவிளையாடல் புராணத்தில் சம்பந்தப்பட்டிருப்பது குறித்தும் தமிழ் பாட புத்தகங்களில் இடம் பெறுகின்றன.
அவ்வையார் எழுதிய, "ஆத்திச்சூடி" பாடலும், தமிழ் பாட புத்தகத்தில் இடம் பெறுகிறது. பல ஆண்டுகளாக, கல்வித்துறை வெளியிட்ட பாட புத்தகங்களில், "அவ்வையார் என்பவர், ஒருவரே" என பொருள் படும் வகையில், கருத்துக்கள் இடம் பெற்றன. தற்போது, ஆறாம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் (இரண்டாம் பருவம்), திடீரென, &'அவ்வையார், ஒருவர் அல்ல; இரு, அவ்வையார்கள் இருந்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் 32வது பக்கத்தில் ஆசிரியர் குறிப்பு என்ற தலைப்பின் கீழ், "அவ்வையார், சங்கப் புலவர்; அதியமானின், நண்பர்; அரிய நெல்லிக்கனியை, அதியமானிடம் பெற்றவர். சங்க காலத்தி்ல், பல பெண் கவிஞர்கள் இருந்தனர். இவர்களில், அதிக பாடல்களை பாடியவர், அவ்வையார். சங்கப்பாடல் பாடிய அவ்வையாரும், "ஆத்திச்சூடி" பாடிய அவ்வையாரும் ஒருவர் அல்ல; வேறு வேறானவர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்டு காலமாக, அவ்வையார் எத்தனை பேர்; அவர்களைப் பற்றிய முழுமையான வரலாறு; அவர்கள் பாடிய பாடல்கள் என விளக்கமாக எந்த தகவலையும் வெளியிடாமல் இப்போது, திடீரென "இரு அவ்வையார்கள் இருந்தனர்" என கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவலைப் பார்த்து, மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த பெற்றோர் அசோக் கூறியதாவது: என் மகள், "அவ்வையார், எத்தனை பேர்?" என என்னிடம் கேட்டாள். "ஒருவர் தான்" என கூறினேன். இல்லை, "இரண்டு பேர்" என புத்தகத்தை காட்டினாள். ஓய்வுபெற்ற தொழிலாளர் நல ஆய்வாளரான என் தந்தையிடம் கேட்டதற்கு அவரும், "அவ்வையார் ஒருவர் தாண்டா..." என கூறினார். நான் படித்த போதும் ஏன், நாம் அனைவரும் படிக்கும் போது, அவ்வையார் ஒருவர் தான் என்பதைப் போல் புத்தகங்களில் கூறப்பட்டிருந்தன. இப்போது, திடீரென, "இரு அவ்வையார்" என கல்வித்துறை கூறியுள்ளது வியப்பளிக்கிறது. உண்மையிலேயே, அவ்வையார் எத்தனை பேர் என்பதை, கல்வித்துறை தெளிவுபடுத்த வேண்டும்.
இருவரோ அல்லது இருவருக்கு மேற்பட்டவரோ இருந்தனர் எனில், இத்தனை ஆண்டுகளாக இந்த விவரங்களை பாட புத்தகங்களில் வெளியிடாதது ஏன் என்பதையும், கல்வித்துறை விளக்க வேண்டும். இவ்வாறு, அசோக் கூறினார்.
இதுகுறித்து, சென்னை அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றின், மூத்த முதுகலை தமிழ் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "ஓய்வுபெற்ற பேராசிரியர், கோவிந்தராஜன் எழுதிய புத்தகத்தில், நான்கு அவ்வையார் இருந்ததாக, குறிப்பிடப்பட்டுள்ளது. சங்ககால அவ்வையார், திருவள்ளுவர் சகோதரியான ஒரு அவ்வையார் உட்பட, நான்கு பேர் என, குறிப்பிடப்பட்டுள்ளனர். உண்மையில், அவ்வையார் எத்தனை பேர் என்பதற்கு, ஆதாரப்பூர்வமான சான்றுகளோ, நுால்களோ இல்லை" என தெரிவித்தார்.
பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "சங்க கால அவ்வையார், ஆத்திச்சூடி பாடலை எழுதிய அவ்வையார், நீதி நுால்களை எழுதிய அவ்வையார் என, மூன்று பேர் இருந்தனர்" என்றார்.
தமிழ் ஆசிரியர், கல்லூரி பேராசிரியர் அளவிலேயே, அவ்வையாரைப் பற்றி, இவ்வளவு குழப்பங்கள் இருப்பதற்கு, அவ்வையாரைப் பற்றிய முழுமையான ஆய்வுகள் நடக்காததும், அதுகுறித்த ஆய்வு அறிக்கைகள் வெளி வராததும் தான் காரணம் என்பது தெளிவாகிறது.
"மேல்மட்ட அளவிலேயே, இவ்வளவு குழப்பங்கள் இருந்தால், பள்ளி மாணவர்களுக்கு, எப்படி சரியான தகவல்களை தர முடியும்..., வருங்கால துாண்களாக இருக்கும் மாணவ சமுதாயத்திற்கு, எந்த விஷயமாக இருந்தாலும், அதைப்பற்றி, முழுமையாக, தெளிவான தகவல்களை தர வேண்டும். இதற்கு, சம்பந்தப்பட்ட அரசு துறைகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats