திருநங்கையின் பள்ளிக் கல்வி சான்றிதழ்களில், பெயர் மாற்றம் செய்ய மறுத்த, அரசு தேர்வுத்துறை அதிகாரியின் உத்தரவை, மதுரை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. மதுரை ஆண்டாள்புரம், ஸ்வப்னா, மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் ஆணாக பிறந்தேன். நாசர் என பெயர் வைத்தனர். உடல்ரீதியாக பெண் தன்மைக்குரிய மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தேன். மும்பையில் பாலின மாற்றத்திற்குரிய ஆபரேஷன் செய்தேன். திருநங்கை என்பதற்கு அரசு மருத்துவமனை சான்றளித்துள்ளது. தற்போது, மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வியில் எம்.ஏ., படிக்கிறேன். நான், அரசு மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பித்தேன். பள்ளிக் கல்விச் சான்றிதழ்களில் உள்ள பெயருக்கும், தற்போதைய பாலியல் ரீதியான அடையாளத்திற்கும் மாறுபாடு நிலவுவதாகக்கூறி, வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. மனரீதியாக பிரச்னை ஏற்படுகிறது. பெயர் மாற்றம்: நாசர் என்பதற்கு பதிலாக ஸ்வப்னா என, கல்விச் சான்றிதழ்களில் பெயர் மாற்றம் செய்ய பள்ளிக் கல்வி செயலரிடம் விண்ணப்பித்தேன். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பெயர் மாற்றத்திற்கான அரசிதழ் அறிவிப்பு நகல்களை சமர்ப்பித்தேன். பதில் இல்லை. டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், பங்கேற்க விண்ணப்பித்தேன். என் பாலின வேறுபாட்டை காரணமாகக் கூறி, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம், ஹால் டிக்கெட் வழங்க மறுத்தது. ஐகோர்ட் உத்தரவின்படி, தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டேன். தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. விண்ணப்பம்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 கல்விச் சான்றிதழ்களில், என் பெயரை ஸ்வப்னா என மாற்றம் செய்து, புதிய சான்றிதழ்கள் அளிக்க அரசு தேர்வுகள்துறை இணை இயக்குனருக்கு விண்ணப்பித்தேன். அவர், தேர்வு விதிகளில் இடமில்லை என மறுத்தார். இதை ரத்து செய்து, பெயர் மாற்றத்துடன் சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை, நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், "அரசு தேர்வுகள்துறை இணை இயக்குனரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை மீண்டும் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றார்.
No comments:
Post a Comment