Tuesday, 19 August 2014

மாணவர்களுக்கு பஸ் பாஸ் கிடைப்பதில் தாமதம்! "ஸ்மார்ட் கார்டு' வழங்க வாய்ப்பு இல்லை


இலவச பஸ் பாஸ் கிடைப்பதில் நிலவும் தாமதத்தால், பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பஸ் பாஸ் "பிரின்ட்' செய்வதற்கான டெண்டர் விடும் பணி
தாமதமானதால், பழைய முறைப்படியே வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, இந்தாண்டும், "ஸ்மார்ட் கார்டு' வடிவில் வழங்க வாய்ப்பு இல்லாத சூழலே நிலவுகிறது.


தமிழக பள்ளி கல்வித்துறை மற்றும் அரசு போக்குவரத்து கழகம் இணைந்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கைக்கேற்ப, மாவட்டத்துக்கு எவ்வளவு பஸ் பாஸ் தேவைப்படும் என கணக்கெடுக்கப்படுகிறது. மாணவர்களிடம் இருந்து தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பம் பெற்று, போக்குவரத்து துறைக்கு அனுப்புவர். அங்கு பஸ் பாஸ் "பிரின்ட்' செய்யப்பட்டு, ஒவ்வொரு கோட்டத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். நடப்பாண்டு, "ஸ்மார்ட் கார்டு' வடிவில் பஸ் பாஸ் வழங்க, ஆரம்பத்தில் திட்டமிடப்பட்டது; அதற்கான முதற்கட்ட பணி நடப்பதால், இரண்டு மாதத்துக்கு பிறகு, பாஸ் வழங்கப்படும். அதுவரை முந்தைய ஆண்டு வழங்கிய பஸ் பாஸ் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அரசின் மறு உத்தரவு வரும் வரை, 2013ம் ஆண்டு பஸ் பாஸ்சுடன் வரும் மாணவர்களை, பஸ்சில் அனுமதிக்க வேண்டும் என நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஜூன், ஜூலை என இரண்டு மாதங்கள் முழுமையாக கடந்து விட்டன. இன்னும் பழைய பஸ் பாஸையே மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். "ஸ்மார்ட் கார்டு' பணிக்கு டெண்டர் முடிக்கப்படாததால், புதிய பாஸ் கிடைக்காமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை மேலாளரிடம் கேட்டபோது, "ஈரோடு, திருப்பூர், கோவைக்கான விண்ணப்பங்கள், ஒட்டுமொத்தமாக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. "பிரின்ட்' செய்து, கோவை கோட்டத்துக்கு அனுப்பப்படும் என்பதால், அங்குள்ள அதிகாரிகளுக்கே விவரம் தெரியும்,' என்றார்.

கோவை கோட்ட உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த 46 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில், 20 ஆயிரம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கு விரைவில் வழங்கப்படும். அதுவரை, பழைய பஸ் பாஸ் பயன்படுத்தலாம்,' என்றார்.

கடந்த 2013ல், மாநில அளவில், 23.76 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, 24.52 லட்சம் மாணவர்கள் என அறிக்கை தயாரிக்கப்பட்டு, "ஸ்மார்ட் கார்டு' திட்டத்துக்கான முதற்கட்ட பணிக்கு 32 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. டெண்டர் விடும் பணி தாமதமானதால், பழைய முறைப்படியே பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால், நடப்பு ஆண்டிலும் ஸ்மார்ட் கார்டாக பஸ் பாஸ் கிடைக்காது என்பது தெளிவாகியுள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats