Tuesday, 19 August 2014

9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக., 26ல் அடைவு ஆய்வு தேர்வு


அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும், 9ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நடப்பு கல்வியாண்டிற்கான அடைவு ஆய்வு தேர்வு, வரும், 26ம் தேதி நடைபெறும் என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின், கல்வித்தர மேம்பாட்டினை அளவிடும் பொருட்டு, அடைவு ஆய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில், ஒரு வட்டாரத்திற்கு, மூன்று பள்ளிகள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அப்பள்ளிகளில் உள்ள, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆங்கிலம், தமிழ்,
கணிதம் ஆகிய பாடங்களில், அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம், மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வாசிப்பு, எழுதுதல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள் அளவிடப்படுகின்றன.
இதுகுறித்து, கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:நடப்பு கல்வியாண்டிற்கான அடைவு ஆய்வு தேர்வு, வரும், 26ம் தேதி நடைபெறும். ஆய்வு நடத்த வேண்டிய பள்ளிகளின் பட்டியல், இறுதி செய்யப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காகவும், ஆய்வு நடக்கும் நாள், பள்ளி, வகுப்பு ஆகியவற்றில், மாற்றம் செய்தல் கூடாது. ஆய்வு குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகளுக்கு, மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.
தமிழ் பாடம், காலை, 9:30 11:00 மணி; ஆங்கிலம், 11:30 1:00 மணி; கணிதம், 2:00 3:30 மணி வரையிலும், தேர்வு நடத்தப்பட வேண்டும்.
மாணவர் எண்ணிக்கை, 30க்குள் இருந்தால், அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த வேண்டும். 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பின், வருகை பதிவேட்டில் உள்ள பெயர்களை வைத்து, சுழற்சி முறையில், மாணவர்களை
தேர்ந்தெடுத்து தேர்வு நடத்த வேண்டும்.அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என, ஒரு பள்ளிக்கு, இரண்டு களப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மாவட்டக்கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்தின் பேராசிரியர்கள், தேர்வினை நடத்த மேற்பார்வையாளர்களாக உள்ளனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், தேர்வு நடத்தும் விதிமுறைகளை, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats