கும்பகோணம் பள்ளி தீ விபத்தில், 94 குழந்தைகள் பலியான வழக்கில், கீழ் கோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து, மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.
கும்பகோணம் கிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில், 2004 ஜூலை 16 ல் தீ விபத்து ஏற்பட்டது. 94 குழந்தைகள் தீயில் கருகி பலியாகினர். 18 குழந்தைகள் காயமடைந்தனர். கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை, தாளாளர் சரஸ்வதி, மாவட்ட துவக்கக் கல்வி அலுவலர் பாலாஜி உட்பட 8 பேருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தஞ்சாவூர் கோர்ட் ஜூலை 30 ல் உத்தரவிட்டது.இத்தண்டனையை எதிர்த்து, பாலாஜி தாக்கல் செய்த மனு: துவக்கக் கல்வி அலுவலராக 2004 மார்ச் முதல் 2004 ஜூன் 30 வரை பணிபுரிந்தேன். பள்ளி கட்டடங்களை வேறு அலுவலர்கள் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்தனர். அதை உயரதிகாரிகளுக்கு பரிந்துரைத்தேன். பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பான ஆவணங்களை, கீழ் கோர்ட்டில் சமர்ப்பித்தேன். பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு, நான் உடந்தையாக இருந்ததாக கூறுவது தவறு.
கடமை தவறியதாக தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதை கிரிமினல் குற்றமாக கருத முடியாது. முக்கியப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ததிலிருந்து என்னை விடுவித்த கீழ் கோர்ட், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. அத்தொகையை செலுத்திவிட்டேன். கீழ் கோர்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எஸ்.ரவி பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் அந்தோணி அருள்ராஜ் ஆஜரானார். நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment