மரக்கன்று நடுதல், வளாகங்களை துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பசுமை பணிகளுக்காக, பள்ளிகளில் புதிய சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தவும், சமூக சேவையில் பங்கெடுக்கும் விதமாகவும், மாவட்ட சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், பள்ளிகளில், பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில், துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் உறுப்பினர்களாக உள்ள மாணவர்கள், வாரத்தில் ஒருநாள், மாலை நேரத்தில் குழு நடத்தி, பசுமைப் பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
இந்த மன்றத்தின் வாயிலாக, பள்ளிகளில் மரக்கன்று நடுதல், கழிவுநீரை மரங்களுக்கு பாய்ச்சும் நடைமுறை, மூலிகை தோட்டம் அமைத்தல், காய்கறி தோட்டம் உருவாக்குதல், குடிநீர் தொட்டி பராமரிப்பு, விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகள் நடக்கின்றன.
மாதந்தோறும் வளாக பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்துவதால், தன் சுத்தம், கழிவறை துாய்மை உள்ளிட்ட பல்வேறு மதிப்பீடுகள் கற்றுத்தரப்படுகிறது.
இந்த மன்றங்களை, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மேலும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, பள்ளிகளின் பட்டியல் தயாரித்து, அரசிடம் ஒப்படைத்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற அதிகாரிகள் சிலர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில், ஆண்டுக்கு மூன்று லட்சம் மரக்கன்றுகள் நட, திட்டமிடப்பட்டுள்ளது. இதை பள்ளி வளாகங்கள், பூங்கா, பொது இடங்களில் நடைமுறைப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றங்களின் வாயிலாக, மரக்கன்று நடும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பசுமை பணியில், அதிகப்படியான மாணவர்களை இணைக்க, மன்றங்கள் இல்லா துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் பட்டியல் தயாரித்து, அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெற்றவுடன், மன்றங்களை துவக்கவும், மரக்கன்றுகள் பராமரிக்கும் முறைகள் குறித்து, மாணவர்களுக்கு கற்றுத்தரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
No comments:
Post a Comment