திருக்கோவிலூர் அருகே உள்ள விளந்தை கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல் (வயது 42). திருக்கோவிலூர் அருகே உள்ள ஆடூர் கொளப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுகந்தி (38).
இவர்களுக்கு மாலதி (23), அருணா (17), சிந்துஜா (12) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். மாலதி சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4–ம் ஆண்டு படித்து வருகிறார். அருணா சேலம் மாவட்டம் தேவியாகுறிச்சியில் பிளஸ்–2 படித்து வருகிறார். சிந்துஜா மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் வீட்டில் இருந்து வந்தார். கந்தவேலுவின் தாயார் பார்வதி (70)யும் அவர்களுடன் வசித்து வந்தார்.
சென்னையில் படித்து வரும் மாலதி ஒரு வார விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்தார்.
நேற்று இரவு கந்தவேல் அவரது மனைவி சுகந்தி, தாயார் பார்வதி ஆகியோர் ஒரு அறையில் படுத்து தூங்கினார்கள். மாலதி, சிந்துஜா ஆகியோர் மற்றொரு அறையில் படுத்து தூங்கினர்.
நள்ளிரவு 2 மணி அளவில் திடீரென்று வீட்டின் சமையல் அறையில் உள்ள பிரிட்ஜ் வெடித்து சிதறியது. அதைத்தொடர்ந்து அந்த அறையில் இருந்து கரும்புகை எழுந்தது. அது வீடு முழுவதும் பரவியது.
இதையடுத்து மின்சார ஒயர்கள் எரிந்து கருகின. வீடு முழுவதும் ஒரே புகைமூட்டமாக இருந்தது. மாணவி மாலதி திடுக்கிட்டு எழுந்தார். வீட்டில் கரும்புகை சூழ்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அங்கே தூங்கிக்கொண்டிருந்த தனது தந்கை சிந்துஜாவை தட்டி எழுப்பினார். முன்பக்க கதவை திறந்து கொண்டு அவர்கள் 2 பேரும் வெளியே ஓடிவந்தனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினார்கள்.
இந்த நிலையில் வீட்டின் மற்றொரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த கந்தவேல், சுகந்தி, பார்வதி ஆகிய 3 பேரும் புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்டார்கள். எங்கே செல்வது என்று தெரியாமல் அவர்கள் தவித்தனர். அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் 3 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
வெளியே தப்பி ஓடிவந்த மாலதி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கத்தினார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கே ஓடிவந்தனர். திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
டி.எஸ்.பி. ராஜேந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மூச்சு திணறி இறந்த கந்தவேல் உள்பட 3 பேர் பிணத்தை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு தாசில்தார் மாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ. கலிவரதன் ஆகியோர் விரைந்து வந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு கலிவரதன் ஆறுதல் கூறினார்.
உயர்மின் அழுத்தம் காரணமாக பிரிட்ஜ் வெடித்ததால் 3 பேர் பலியாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
பிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment