Thursday, 3 July 2014

ஜூலை 2: நிலவு நாயகன் மயில்சாமி அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

நிலவை நோக்கி கனவுகளை முடுக்கிய நாயகன் …இளைஞர்களின் அறிவியல் திசைகாட்டி மயில்சாமி அண்ணாதுரை, பொள்ளாச்சி அருகி ல் உள்ள கோதவாடி கிராமத்தில் ஜூலை 2, 1958-ல் பிறந்தார். தந்தை, மயில்சாமி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். மாலையில் தையல் வேலையும் செய்வார். அறிஞர் அண்ணாவின் மீதான ஈடுபாட்டால், தன் பிள்ளைக்கு ‘அண்ணாதுரை’ எனப் பெயர் சூட்டினார்.
மயில்சாமி அண்ணாதுரையின் பள்ளிப் பருவம், அரசுப் பள்ளியிலே அமைந்தது. ஒழுங்கான வகுப்பு அறைகள்கூட கிடையாது. ‘மாட்டுக் கொட்டகையில் ஒரு வருஷம், கோயில் திண்ணையில் மறு வருஷம், கோணிப் பையே குடையாக, செருப்பே இல்லா நடைப் பயணம்’ எனக் கவிதை மூலம் குறிப்பிட்டு இருக்கிறார். ஆறாம் வகுப்பு படிக்க, 5 கிலோ மீட்டர் நடந்து செல்வார்.

தினமும் ‘பகவத் கீதை’ படிப்பதை வழக்கமாகக்கொண்டு இருக்கிறார். திருக்குறளின் மீது எல்லையற்ற பற்றுதல் உண்டு. பள்ளிக் காலத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை வெகுவேகமாகச் சொல்வார். ‘அரசாங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஊக்கத் தொகையைப் பெறக் கூடாது’ என்ற அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொண்டாலும், 11-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக, அரசாங்கம் ­­தங்கப் பதக்கம் வழங்கி, படிப்புச் செலவையும் முழுமையாக ஏற்றுக்கொண்டது.
‘நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம்’ கல்லூரியில் எம்.ஏ. மின்னணுவியல் பயின்றார். தமிழ் வழியில் இருந்து, ஆங்கில வழிக் கல்விக்கு மாறியதால் முதலில் சிரமப்பட்டார். பிறகு, தமிழ் ஆசிரியர் சிற்பி அய்யாவின் ஊக்குவிப்பால், முதன்மையான மாணவனாக ஜொலித்தார். தான் எழுதிய ‘கையருகே நிலா’ என்கிற கட்டுரைத் தொகுப்புக்கு, முன்னுரையை சிற்பியிடம் இருந்தே பெற்றார்.
இளநிலைக் கல்வி படிக்கும்போது, மற்ற மாணவர்கள் ஒரு புராஜெக்ட் செய்யவே திணறியபோது, நான்கு புராஜெக்ட்கள் மற்றும் முதுநிலைக் கல்வியில் மூன்று புராஜெக்ட்கள் செய்தவர் மயில்சாமி அண்ணாதுரை. ‘இதற்குக் காரணம், அன்னைத் தமிழ் வழி கற்ற கல்வியே’ எனப் பெருமிதத்தோடு குறிப்பிடுவார்.
‘ஆரோலேக்’ என்கிற ஃப்ரெஞ்ச் கம்பெனியில் வேலை கிடைத்தபோதும், அதைவிடக் குறைந்த ஊதியம் கிடைக்கும் இஸ்ரோவில் பணியாற்றினார். பிறகு, நாசாவில் வேலை வாய்ப்பு வந்தது. அன்னை நாட்டுக்குப் பணியாற்றுவதே நிறைவு’ என்று அதை மறுத்துவிட்டார்.

இஸ்ரோவில் பணியாற்ற நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, நுண்செயலியைப் (Microprocessor) பற்றிய இவரின் அறிவு, அங்கே இருந்தவர்களைப் பிரமிக்கவைத்தது. வேலைக்குச் சேர்ந்த ஆறாவது மாதத்திலேயே, செயற்கைக்கோள்களின் இயக்கத்துக்கான மென்பொருள் முன்மாதிரியை உருவாக்கலாம் எனச் சொன்னார். அதை, வெற்றிகரமாகவும் செய்து முடித்தார். இதன் மூலம், சென்ஸார் செயல் இழந்தாலும் செயற்கைக்கோள் செயலாற்ற முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
விஞ்ஞானிகள் கூட்டத்தில்… பிறரின் கருத்துக்களில் தவறு இருந்தால், உடனே சுட்டிக்காட்டிவிடுவார். ‘இது சரியான அணுகுமுறை அல்ல. தனியே அந்த அறிஞரிடம் சென்று விளக்க வேண்டும்’ என்ற முனைவர் நாகபூஷணம் அவர்களின் அறிவுரை, தன் வாழ்வைத் திருப்பியது என்பார். இவரின் புதிய அணுகுமுறை, சந்திராயனின் இயக்குனராக இவரை உயர்த்தியது.
சந்திராயன் மூலம் நிலவில் தண்ணீர் உருவான இடத்தைக் கண்டறிந்து, உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தார். அந்த செயற்கைக்கோள் எடுத்த படங்களின் துல்லியம், உலக நாடுகளைப் பிரமிக்கவைத்தது. ‘இது கூட்டு முயற்சியின் வெற்றி’ என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார். மேலும், ‘சாதாரணக் கிராமங்களில் இருந்து கிளம்பிய நாம், இந்த வெற்றியை… நாம் புறப்பட்ட மண்ணில் உள்ள இளம் பிள்ளைகளுக்குச் சொல்லி உத்வேகப்படுத்த வேண்டும்” என்று தன் குழுவினருக்குச் சொன்னார்.
விடுமுறை நாட்களில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களோடு உரையாற்றி உத்வேகப்படுத்துகிறார் மயில்சாமி அண்ணாதுரை. அன்னைத் தமிழில் பயிலும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு என்பார். இதையே…
‘அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்’
எனத் தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats