Wednesday, 2 April 2014

ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஜெயந்தி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-



நான், கடந்த 8.10.2007 அன்று பட்டதாரி ஆசிரியையாக பணியில் சேர்ந்தேன். 31.3.2014 அன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். கல்வி ஆண்டு முடிவடையும் வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் மனு கொடுத்தேன். அந்த மனுவை முதன்மை கல்வி அதிகாரிக்கு, தலைமை ஆசிரியர் அனுப்பி வைத்தார். நான், 10 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்று கூறி எனக்கு பணி நீட்டிப்பு வழங்க முதன்மை கல்வி அதிகாரி மறுத்து 17.2.2014 அன்று உத்தரவிட்டார். இது நியாயமற்றது. எனவே, முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து விட்டு எனக்கு கல்வி ஆண்டு முடிவடையும் வரை பணி நீட்டிப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்

இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.விசுவலிங்கம் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:-

மாணவர்களின் நலன் கருதியே பணி ஓய்வு பெறும் ஆசிரிர்களுக்கு கல்வி ஆண்டு முடிவடையும் வரை பணி நீட்டிப்பு வழங்கப்படுகிறது. கல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்றால் 10 ஆண்டுகள் கண்டிப்பாக பணியாற்றி இருக்க வேண்டும் என்பது நியாயமற்றது.

கல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும். எனவே, மனுதாரரை கல்வி ஆண்டின் இறுதி வரை பணியாற்ற அனுமதி மறுத்த தஞ்சாவூர் முதன்மை கல்வி அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரரை இந்தக்கல்வி ஆண்டு இறுதி வரை பணியாற்ற அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats