பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, இன்னும் முடியவில்லை; பத்தாம் வகுப்பு தேர்வு, வரும், 9ம் தேதி தான் முடிகிறது. விடைத்தாள் திருத்தியதற்குப் பின், "டேட்டா சென்டரில்' மதிப்பெண்களை தொகுக்கும் பணி மற்றும் தேர்வு முடிவு தயாரிக்கும் பணி என, பல வேலைகள் உள்ள நிலையில், எந்த ஆண்டும் இல்லாமல், மிகவும் முன் கூட்டியே, தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளை, தேர்வுத்துறை, நேற்று
அறிவித்தது. அதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, மே,23ம் தேதியும் வெளியாகிறது. கடந்த, மார்ச், 3 முதல், 25ம் தேதி வரை, 2,242 மையங்களில், பிளஸ் 2 பொது தேர்வு நடந்தது. 8.26 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதினர். 66 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது. மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, முக்கிய பாட விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கி உள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வு, கடந்த மாதம், 26ம் தேதி துவங்கியது. 3,179 மையங்களில், 10.38 லட்சம் மாணவர்கள், தேர்வை எழுதி வருகின்றனர். நேற்று வரை, தமிழ் மற்றும் ஆங்கில தேர்வுகள் மட்டும் தான் முடிந்துள்ளன. கணிதம், அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் இன்னும் நடக்கவில்லை. வரும், 9ம் தேதி வரை, தேர்வு நடக்கிறது. விடைத்தாள் திருத்தும் பணி, இன்னும் துவங்கவில்லை. இந்நிலையில், அவசரம், அவசரமாக, எந்த ஆண்டும் இல்லாமல், மிகவும் முன்கூட்டியே, தேர்வு முடிவு வெளியாகும் தேதியை, தேர்வுத்துறை, நேற்று அறிவித்தது.
இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் வெளியிட்ட அறிவிப்பில், ""பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 9ம் தேதி காலை, 10:00 மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 23ம் தேதி, காலை, 10:00 மணிக்கும் வெளியிடப்படும். தேர்வு முடிவை அறிவதற்கான இணையதள முகவரி, பின்னர் அறிவிக்கப்படும்,'' என, தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வு முடிவு, மே,
9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, மே, 31ம் தேதியும் வெளியாயின. கடந்த ஆண்டைப்போல், இந்த ஆண்டும், பிளஸ் 2 முடிவு, மே, 9ல் வெளியாகிறது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, 10ல் துவக்கம்
தேர்வுத்துறை இயக்குனர் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, வரும், 15ம் தேதியுடன் முடிகிறது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, 10ம் தேதி துவங்கி, 20ம் தேதிக்குள் முடிந்துவிடும். விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின், "டேட்டா சென்டரில், 15 நாள் வேலை இருக்கும். இதற்கு போதிய கால அவகாசம் இருக்கிறது. எனவே, குறித்த தேதியில், தேர்வு முடிவு வெளியாகும். கடந்த ஆண்டு, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்ரல் இறுதி வரை நடந்தது. அதனால், தேர்வு முடிவு வெளியாவது, தள்ளிப்போனது. ஆனால், இந்த ஆண்டு, 10 நாள், முன்கூட்டியே பணி முடிவதால், தேர்வு முடிவும், ஒரு வாரம் முன்னதாக வெளியாக உள்ளது. இவ்வாறு, இயக்குனர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment