Monday, 31 March 2014

உண்டு உறைவிட பள்ளிகளை மூடியதால் அதிர்ச்சி:மாவட்ட மலைக்கிராம மாணவர்கள் அவதி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளை, திடீர் என மூட உத்தரவிட்டுள்ளதால், மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். மேலும், கல்வி மற்றும் மற்றும் தொழில் வளர்ச்சியில், மிகவும் பின் தங்கிய மாவட்டம் ஆகும். மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.


தர்மபுரி மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், இம்மாவட்ட மக்கள் வேலை தேடி, ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்துக்கு அதிகளவில் குடும்பத்தோடு, வேலை தேடி சென்று வருகின்றனர். மேலும், பல பெற்றோர் குடும்ப வருமானத்துக்காக, தங்களது குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வந்தனர். இதனால், மாவட்டத்தில் பள்ளியில் இருந்து இடையில் நிற்கும் குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
மேலும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலத்துக்கு வேலை தேடி செல்லும் பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளை அதிகளவில் குழந்தை திருமணம் செய்து வைத்தனர். இதே போன்று, தர்மபுரி உட்பட வேறு பல மாவட்டங்களிலும் இந்நிலை தொடர்ந்தது.

இதையடுத்து, தர்மபுரி மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளியில் இருந்து குழந்தைகள் இடையில் நிற்பது மற்றும் குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்க எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் மூலம் உண்டு உறைவிட பள்ளிகளை துவங்கியது.
தர்மபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட உண்டு, உறைவிட பள்ளிகளால், ஆண்டு தோறும் பள்ளியில் இருந்து இடையில் நிர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. மேலும் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் பாமர மக்கள் தங்களது குழந்தைகளை உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்து வந்தனர்.

தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரியை அடுத்த முத்துகவுண்டன் கொட்டாய், நல்லம்பள்ளி, பெரியாம்பட்டி, இண்டூர், தீர்த்தமலை, பாப்பாரப்பட்டி என மாவட்டத்தில், எட்டு உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார், 400 பேர் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு படிக்கும் மாணவர்களை, இன்றுடன் உண்டு உறைவிட பள்ளியில் இருந்து வெளியேறும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. முழு ஆண்டு தேர்வு முடியாத நிலையில், உண்டு உறைவிட பள்ளியில் இருந்து திடீர் என வெளியேற சொல்வதால், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அனைவருக்கு கல்வித்திட்ட அலுவலர்களின் இந்த அதிரடியால், உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் கல்வி தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர்களின் நலன் கருதி, முழு ஆண்டு தேர்வு முடியும் வரை, உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தங்க, நடவடிக்கை எடுக்க, பொது நல ஆர்வலர்கள் அனைவருக்கும் கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆண்டுதோறும் மார்ச் இறுதியில், உண்டு உறைவிட பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். அதே போன்று தான், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள, எட்டு பள்ளிகளில், தலா, 12 பேர் வரை தங்க வைக்கவும் நடைமுறை உள்ளது. மீண்டும், அடுத்த கல்வி ஆண்டில், உண்டு உறைவிட பள்ளி வழக்கம் போல் செயல்படும், என்றனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats