Sunday, 13 July 2014

கேரளத்தில் 742 ஒப்பந்த தமிழ் ஆசிரியர்கள் பணி நீக்கம்



கேரள மாநிலத்தில் பணிபுரிந்து வந்த 742 ஒப்பந்த தமிழ் ஆசிரியர்களை அம்மாநில அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் காசர்கோடு, பாலக்காடு, இடுக்கி, திருவனந்தபுரம் மாவட்டங்களில் மொழி சிறுபான்மையின மக்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இதில் காசர்கோடு மாவட்டத்தில் கன்னட மொழி பேசுவோர் அதிக அளவில் வசிக்கின்றனர். மற்ற 3 மாவட்டங்களிலும் கணிசமான அளவுக்கு தமிழ் மொழி பேசுவோர் உள்ளனர். இப்பகுதிகளில் அதிக அளவில் தமிழ் வழி கல்விக் கூடங்களும் இயங்கி வருகின்றன. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் ஏராளமான தமிழ் மக்கள் உள்ளனர்.

இங்குள்ள சாலை என்னும் பகுதியில் அரசு தமிழ் வழிக் கல்விக்கூடம் ஒன்று உள்ளது. இதற்காக தன் சொந்த நிலத்தில் இருந்து ஒன்றரை ஏக்கரை தானமாக வழங்கியிருந்தார் முத்தையா பிள்ளை என்னும் தமிழர். இங்கு அதிகம் பேர் தமிழ்வழிக் கல்வியில் பயின்று வருகின்றனர்.

மேலும் திருவனந்தபுரத்தில் தமிழ் மொழிக்கான ஆசிரியர் பயிற்சி பள்ளியும் ஒன்று உள்ளது. அங்கு தமிழ் வழியில் போதிக்க நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் இழுத்தடித்து வருகிறது கேரள கல்வித் துறை. கேரளாவில் பல்வேறு தமிழர் பகுதிகளிலும் தமிழ் வழியில் போதிப்பவர்கள் தினக்கூலி பணியாளர்களைப் போன்றே நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அதன் உச்சகட்டமாக 742 தமிழ் ஆசிரியர்கள் தற்போது திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இடுக்கி பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர் பிரேம் கூறும்போது, “கேரள மாநிலத்தில் தமிழ் போதிக்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஒப்பந்தம் போடப்பட்டு பணி அமர்த்துகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ரூ.8 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. நடப்பு கல்வியாண்டில் ரூ.14 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆனால் விடுப்பு எடுத்தால் சம்பளத்தை பிடித்தம் செய்துவிடுவர். பள்ளிகளுக்குத் தேர்வு விடுமுறையின்போது விடுமுறை கால ஊதியமும் வழங்கப்படுவதில்லை. ஏறக்குறைய தினக்கூலிப் பணியாளர்

கள் வாழ்வுதான். இப்போது ஒப்பந்த கால கெடு முடிந்துவிட்டதால் பணிநீக்கம் செய்துவிட்டனர். மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் கண்டிப்பாக பணி வழங்கப்படும் என்ற உறுதி எதுவும் கிடையாது. தமிழ் போதிப்பதாலேயே மாற்றாந்தாய் மனப்பாங்கோடு நடத்தப்படுகிறோம்” என்றார்.

கேரள கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் இதுகுறித்து கேட்ட போது, “இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில் ஒருசில தமிழ் பள்ளிகளில் போதிய மாணவர்கள் இல்லாமல் உள்ளது. அப்படிப்பட்ட பகுதிகளில் உள்ள ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்குதான் மாற்றம் செய்துள்ளோம்” என்றார்.

மலையாளம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு பட்டுக் கம்பளம் விரிக்கும் கேரள அரசு, தமிழ் ஆசிரியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு அணுகுவதாக தமிழ் ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats