Wednesday, 30 July 2014

அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படுமா?

பொழுதுபோக்கு இடமாகவும், மது அருந்தும் கூடாரமாகவும் அரசுப் பள்ளிகள் பயன்படுத்தப்படுவது தொடர்கதையாகி வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது; இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு பள்ளிகளுக்கு கட்டாயம் இரவு பாதுகாவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு ஆதாரமாக அரசு பள்ளிகள் விளங்குகின்றன. கல்வித்தரம், பள்ளியின் கட்டமைப்பு, விளையாட்டு வசதி மற்றும் அடிப்படை வசதிகள் போன்றவைகளை கருத்தில் கொண்டே பெற்றோர் தங்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
அரசுப் பள்ளிகள் பாதுகாப்பில்லாமல் இருப்பதே
அவை பெற்றோரால் தவிர்க்கப்படுவதற்கு முதன்மை காரணமாக உள்ளது. கல்வித்தரத்தை உயர்த்த ஆங்கில வழிக்கல்வி, ஆசிரியர்களுக்கு பயிற்சி போன்ற பல்வேறு வழிமுறைகளை அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.
எனினும், பள்ளி வளாகம் பல்வேறு சமூக விரோதச் செயல்களுக்கு பயன்படுவதை தவிர்க்க முழுமையான நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் பள்ளி வளாகத்திற்கு சீர்கேடு உண்டாவது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிச்சயம் இல்லாத அரசுப் பள்ளிகளை புறக்கணிக்கின்றனர் பெற்றோர்.
அரசுப் பள்ளிகளுக்கு இரவு பாதுகாவலர் நியமிப்பதன் மூலம் பள்ளி வளாகம் பாதுகாக்கப்படுவதோடு, அரசுப் பள்ளிகளின் மீது நம்பிக்கை ஏற்படும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை, பொள்ளாச்சி சுற்றுப்பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அரசுப் பள்ளிகள் இரவு நேரங்களில் மதுக்கூடாரமாகவும், சீட்டாட்டம் போன்றவற்றை விளையாடு இடமாகவும் மாறி வருவது இப்பகுதி அரசு பள்ளிகளில் தொடர்கதையாக உள்ளது.
இவற்றில் பெரும்பாலும் கிராமப்புற அரசுப்பள்ளிகளே பாதிக்கப்பட்டுள்ளன. பல கனவுகளோடு பள்ளிக்கு வரும் மாணவர்கள் பாட்டில்களை சுத்தம் செய்யும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
சில பள்ளிகள் காலை நேரங்களிலேயே பொழுதுபோக்கு இடமாக பயன்படுத்தப்படுகிறது. போலீசாரிடத்தில் பள்ளி ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இரவு நேரங்களில் போலீசார் மூலம் பள்ளிகள் கண்காணிக்கப்படுகிறது.
இருப்பினும், இவை தற்காலிகமாகவே உள்ளதால் மீண்டும் பள்ளியின் அக்கம் பக்கத்து ஆசாமிகள் தங்களின் வேலையை காட்ட துவங்குகின்றனர். இரவு பாதுகாவலர்கள் நியமிப்பதே இதற்கு நிரந்தர தீர்வாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இரவு பாதுகாவலர்கள் பணியிடம் இருந்தும் பல ஆண்டுகளாக ஏராளமான பள்ளிகளில் அவை நிரப்பப்படாமல் உள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளிகளே பொறுப்பு என பெற்றோர் எண்ணி குழந்தைகளை பள்ளியில் விட்டுச்செல்கின்றனர். இந்நிலையில் பாதுகாவலர் இல்லாத பள்ளிகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களே அப்பணியையும் சேர்த்து செய்து வருகின்றனர். இதனால் பாடமும் நடத்த முடியாமல், மாணவர்களை முழு நேரமும் கண்காணிக்க முடியாமல் திணறுகின்றனர்.
அரசு பள்ளிகள்தானே என எண்ணியே பலரும் பல்வேறு செயல்களுக்கு பள்ளி வளாகத்தை பயன்படுத்துவதால், இன்று பல பள்ளிகளுக்கும் கேட்பாரற்று கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளை தரம் உயர்த்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள கல்வித்துறை பள்ளியை பாதுகாக்க இரவு காவலர்களை நியமிப்பதற்கு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது மேலும் வேதனைப்படுத்துகிறது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களை நிரப்பவும் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் காவலர்களை நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats