Monday, 28 July 2014

உபரி ஆசிரியர்களை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு

பல அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணியாற்றி வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள் பற்றி கணக்கெடுக்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இலவச கல்வி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் 462 செயல்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள 284 அரசு பள்ளிகளில், நகரப்பகுதியில் 140 பள்ளிகளும், கிராமப்புறத்தில் 127பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
தற்போது, அரசு பள்ளிகளுக்கு இணையாக, தனியார் பள்ளிகளும் அதிகரித்து வருகின்றன. ஆங்கில மோகம், கல்வித்தரம், போக்குவரத்து வசதி உள்ளிட்ட காரணங்களால், பெரும்பாலான மக்கள் தனியார் கல்வி நிறுவனங்களையே நாடி வருகின்றனர்.
சேர்க்கையில் சரிவு: ஆண்டுதோறும் கிராமப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கணிசமாக குறைந்து வருகிறது. அதேசமயம், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை, நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பணியாற்றவே பெரும்பாலான ஆசிரியர்கள் விரும்புகின்றனர். மாணவர்களின் கிரகிப்பு திறன், நீண்ட துார பயணம், போக்குவரத்து வசதியின்மை போன்ற காரணங்களால் கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றுவதை தவிர்க்க விரும்புகின்றனர்.
பற்றாக்குறை: சில ஆசிரியர்கள் ஆளுங்கட்சி பிரமுகர்களின் சிபாரிசின் பேரில், நகர்புற பள்ளிகளிலேயே பல ஆண்டு காலம் பணியாற்றும் நிலை உள்ளது. இது ஒரு புறமிருக்க, சீனியர் ஆசிரியர்கள் பலர், கல்வித் துறை அதிகாரிகளின் கைங்கரியத்தால் நகர் பகுதியிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
போராட்டம்: இதன்காரணமாக கிருமாம்பாக்கம், நெட்டப்பாக்கம், தவளக்குப்பம், மதகடிப்பட்டு உட்பட பல இடங்களில் உள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.
சுற்றறிக்கை: எனவே, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கடந்த வாரம் அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
கணக்கெடுப்பு: ஒவ்வொரு பள்ளியிலும் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கெடுத்து, அறிக்கை தருமாறு தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், காலி பணியிடங்களுக்கு உபரி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
வசதிகள் இருந்தும்...
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடபுத்தகம், சீருடை, காலணி, சிற்றுண்டி, சைக்கிள், பாக்கெட் மணி உள்ளிட்ட பல இலவசங்களை அரசு வாரி வழங்கி வருகிறது. அத்துடன், தேவையான கட்டட வசதி, விளையாட்டு மைதானம் போன்ற வசதிகளையும் செய்து கொடுத்து வருகிறது. எனினும், ஆரம்பக் கல்வியைத் பொறுத்தவரை, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, படிப்படியாக குறைந்து வருகிறது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats