5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Saturday, 28 December 2013

அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அடையாள அட்டை அவசியம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு

மாவட்டங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் முதல் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அரசு உயரதிகாரி வரை அனைவரும் பணியின்போது கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த உத்தரவு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், தலைமைச் செயலகத்தில் உள்ள துறைகளின் செயலாளர்கள், மாவட்ட நீதிபதிகள், குற்றவியல் தலைமை நீதிபதிகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என அரசு ஊழியர்கள் பணியாற்றும் அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையில் அரசு பணியாளரின் பெயர் மற்றும் பதவி ஆகியன ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதற்கு பதிலாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம் பெறுமாறு மாற்றி அமைத்து உரிய அடையாள அட்டைகளை வழங்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் ஏற்கெனவே கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அனைத்து அரசுப் பணியாளர்களும் அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில் அடையாள அட்டையை தவறாது அணிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைத் தலைவர்களும் மாவட்ட ஆட்சியர்களும் தங்களுக்குக் கீழேயுள்ள சார்நிலை அலுவலகங்களுக்கு இது தொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று தனது உத்தரவில் டேவிதார் கேட்டுக் கொண்டுள்ளார்.
யாரும் அணிவதில்லை: தலைமைச் செயலகம், சட்டப் பேரவைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்திலும் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியே புகைப்படத்துடன் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த அடையாள அட்டைகளை பெரும்பாலான பணியாளர்கள் அணிவதில்லை என்று புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து அரசு பணியாளர்கள் அனைவரும் அடையாள அட்டையை அணிய வேண்டும் என்ற மாநிலம் தழுவிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment


web stats

web stats