5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Monday, 23 December 2013

அரசு பள்ளிகள் என்றால் பிரியம் அதிகம்: சகாயம்

நாட்டில் எத்தனையோ அதிகாரிகள் இருக்கிறார்கள் ஆனால் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக சில அதிகாரிகள்தான் இருக்கிறார்கள் அவர்களில் முதன்மையானவராக தெரிபவர் சகாயம்தான். காரணம் மிகவும் எளிது. லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்ற வார்த்தையின் வடிவமாக நேர்மைக்கு மிகவும் நெருக்கமானவராக துணிவுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவராக
நியாயத்தின் பக்கமே எப்போது நிற்பவராக உண்மையைச் சொல்ல தயங்காதவராக பொய்யான புகழுக்கு மயங்காதவராக தவறுக்கு எப்போதும் துணை போகாதவாரக இருப்பவர். இன்றைய தேதிக்கு இவர் ஒருவர்தான் நீண்ட தொலைவிற்கு தட்டுப்படுகிறார்.
கோ- ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனராக தற்போது இருந்து வரும் சகாயம் கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் தொலைபேசி மையத்தினை துவக்கிவைத்து பேசினார்.
வார்த்தைக்கு வார்த்தை என் தேசம் என் தமிழ் மக்கள் என்று உணர்ச்சி பெருக்கோடு எளிய தமிழில் அவர் பேசிய பேச்சில் இருந்த பல "நிஜக்கதைகள்தான்" இங்கே அவரைப்பற்றிய பதிவுக்கு காரணம்.
இதோ சகாயம் உங்களுடன் இதயம் திறந்து பேசுகிறார்... உங்கள் இதயத்தோடு பேசுகிறார். என்னைப் பற்றி சமீபத்தில் பத்திரிகையில் ஒரு செய்தி வந்திருந்தது. அந்த செய்தியில் நானும் (கெஜ்ரிவால் போல) ஒரு அரசியல் இயக்கம் தொடங்குவேனா? என்று கேட்டு எழுதியிருந்தது. நிச்சயமாக இல்லை. காரணம்.... நான் விரும்புவது வெறும் அரசியல் மாற்றம் அல்ல, லஞ்சமும், நேர்மையும் அற்ற, முழு சமுதாயமும் நேர்மையாக மாறக்கூடிய மனமாற்றமே.
லஞ்சத்தையும், ஊழலையும் கூட ஒழித்து விடலாம் ஆனால் மதுவை ஒழிக்க முடியுமா என்பதுதான் எனது இன்றைய சந்தேகம். காரணம் நான் மதுரையில் ஆட்சித்தலைவராக இருந்த போது நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு ஒரு போன் வந்தது போன் செய்தவர் "ஐயா கலெக்டரா" என்று கேட்டு உறுதி செய்து கொண்டார். ஏதோ ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்துடன் எதிர்முனையின் குரலை எதிர்பார்த்த போது "உசிலம்பட்டி பஸ் நிலையம் பக்கத்துல இருக்கிற டாஸ்மாக் கடையில் விற்கப்படும் ரம்மில் முன்பு போல கிக்கே இல்லை, ஏதோ தப்பு நடக்கிறது நடவடிக்கை எடுங்கள்" என்றார்.
பகலில் கூட குடிநீர் பிரச்னையை சொல்ல முன்வராத என் தமிழ் சமூகம் "குடிப்பதில்" ஒரு பிரச்னை என்றதும் நள்ளிரவு என்று கூட பாராது பேசுகிறதே என வேதனைப்பட்டேன். இதே போல தனியார் வசம் மதுக்கடைகள் இருந்த காலத்தில் நான் கோவையில் பணியாற்றினேன். அப்போது குறிப்பிட்ட இலக்கை எட்டமுடியாத கடைக்காரரிடம் விசாரணை செய்த போது அடுத்த மாதம் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகம் விற்றுவிடுவோம் என்றார். எப்படி என்று கேட்டபோது அடுத்த மாதம் இந்த பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியை திறந்து விடுவார்கள் பிறகு விற்பனை சூடு பிடித்துவிடும் என்றார்.
அவர் இதை சாதாரணமாகவே சொன்னார், ஆனால் நான் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள என் தேசத்தின் எதிர்கால லட்சியத்தை அல்லவா அவர் அசைத்து பார்த்து விட்டார், கனத்த இதயத்தோடு அங்கு இருந்து அகன்றேன்.
ஜெயங்கொண்டம் என்ற ஊரில் சிவக்கொழுந்து என்று ஒரு 90 வயது நெசவாளர் இருக்கிறார். ஒரு நாளைக்கு 19 ஆயிரம் முறை அவரது அங்கங்களை அசைத்து, அசைத்து நாள் முழுவதும் வேலை செய்து ஒரு சேலை நெய்தால் அவருக்கு கிடைக்கும் ஊதியம் 75 ரூபாய்தான். நெசவாளர்கள் முன்னேற்றத்திற்காக உள்ள அலுவலகத்தின் கடைநிலை ஊழியரின் ஊதியம் கூட 500 ரூபாயாகும். இந்த ஊதியம் ஆளாளுக்கு மாறுபட்டு 3000 வரை உள்ளது.
யாருக்காக இந்த துறை இயங்குகிறதோ அவருக்கு ஊதியம் வெறும் 75 ரூபாய் ஆனால் அவரை வைத்து பிழைக்கும் அலுவலர்களுக்கு, அதிகாரிகளுக்கு மூவாயிரம் ரூபாய் வரை நாள்தோறும் சம்பளம் என்றால் இதைவிட சமூக அவலம், சமூக மோசடி வேறு ஏதாவது இருக்க முடியுமா, வெட்கித் தலை குனிந்தேன்.
இந்த நாட்டில் உள்ள ஏழைமக்களின் கடைசி நம்பிக்கை என்பதாலும், என் இனிய தமிழை வளர்க்கும் ஒரு காரணியாக விளங்குவதாலும் அரசு பள்ளிகள் என்றால் எனக்கு அதிகம் பிரியம் அடிக்கடி அங்கு சென்று படிக்கும் குழந்தைகளிடம் பேசுவேன். காரணம் பெரியவர்களைப் போல அவர்களிடம் பொய் இருக்காது, பொறாமை இருக்காது, சூழ்ச்சி புரியாது.
அந்த குழந்தைகளில் ஒன்று பேசும்போது நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றது உனக்கு எதற்கம்மா நிறைய பணம் என்ற போது அரிசி சோறு சாப்பிட ஆசையாக இருக்கிறது ஆகவே அதற்கு நிறைய சம்பாதிக்க விரும்புகிறேன் என்றது, அப்படியே ஆடிப்போய்விட்டேன். சுதந்திரத்தின் பலனை யார் தான் அனுபவிக்கிறார்கள் என்ற கேள்வி என்முன் பூதாகரமாக எழுந்து நின்றது.
சென்னைக்கு அருகில் உள்ள பன்னாட்டு குளிர்பான நிறுவனமான பெப்சி தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்புகள் பருக அருகதையற்ற பானத்தை தயாரித்தது என்பது தெரிந்ததும் எட்டு பூட்டுகளை போட்டு அந்த நிறுவனத்தை பூட்டினேன், இவ்வளவு துணிச்சல் எங்கு இருந்து வந்தது என்று கேட்டவர்கள் பலர், என் பதில் நேர்மையாய் இருந்து பாருங்கள் இதைவிட அதிக துணிச்சல் வரும் என்பதாகவே இருந்தது.
லஞ்சம் அதிகம் புழங்கும் இடத்தில் ஒன்றான காவல்துறையின் கதை இது. லஞ்சம் வாங்கிக் கொண்டு ஒரு கிராமத்தில் கள்ள சாராயம் விற்பதைக் கண்டு கொள்ளாமல் இருந்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் என்னிடம் புகார் செய்தனர். நான் கள ஆய்வு செய்து எனக்கு கீழ் உள்ளவர்களை கண்டித்தேன். அவர்களுக்கும் லஞ்சத்தில் பங்கு உண்டு போலும் காவல்துறைக்கு துணை போக என் மீது எப்ஐஆர் போட்டனர்.
தப்பை தட்டிக் கேட்பதே தப்பா என்று நினைத்த நான். இதைக்கண்டு பயப்படவில்லை நானும் சட்டம் படித்தவன் என்ற முறையில் துணை கண்காணிப்பாளர் வரை ஒரு சம்மன் அனுப்பினேன் மறுநாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் தெரியாமல் நடந்துவிட்டது மன்னியுங்கள் என்றனர், மன்னிக்க வேண்டியது நான் அல்ல உங்களால் பாழ்பட்டு கிடக்கும் கிராமமக்கள் என்றேன்.
ஒரு அதிகாரி நினைத்தால் மனசாட்சிப்படி நடந்தால் அவரால் எவ்வளவோ இந்த தேசத்திற்கு இந்த மக்களுக்கு நல்லது செய்ய முடியும் ஒரு ஊனமுற்ற இளைஞர் ஒருவர் மூன்று சக்கர சைக்கிள் கேட்டு மனு கொடுத்தார். மனு கொடுத்த அன்று மாலையே அவருக்கு அவர் கேட்ட மூன்று சக்கர சைக்கிளை பெறச் செய்தேன் இது என்னால் மட்டும் முடிந்தது என்று சொல்ல வரவில்லை முயன்றால் எல்லேராலும் முடியும் என்றே சொல்ல வருகிறேன்.
ஊழலின் மொத்த உருவமாக இருந்த என் கீழ் உள்ள அதிகாரியை அசைத்து கூட பார்க்க முடியாது என்று என்னை அச்சுறுத்தினார்கள் காரணம் லஞ்சம் கொடுத்து, கொடுத்து சகலரையும் கெடுத்து வைத்திருந்தார். அவரை அசைத்து மட்டுமல்ல செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனையும் பெறவைத்தேன்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். தப்பு செய்தவர்களின் பெயர், ஊர், காலம் என அனைத்தையும் என்னால் சொல்லமுடியும் ஆனால் இப்போது நான் சொல்ல முடியாது. பிறகு ஒரு காலம் வரும்போது சொல்கிறேன் சொல்வதென்ன புத்தகமாகவே போடுகிறேன். எனது நேர்மைக்கு பரிசாக இதுவரை 22 முறை இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளேன் என்றார்கள். அதனால் என்ன நான் போகும் ஒவ்வொரு இடத்திலும் லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்துபவர்களின் எண்ணிக்கை என்னோடு சேர்ந்து கூடிக்கொண்டே போகிறதே அதை நினைத்து சந்தோஷம்தான்.
ஒன்று மட்டும் நிச்சயம் லஞ்சத்திற்கும், ஊழலுக்கும் எதிராக என்னைப் போல உள்ளிருந்து போராடுவதை விட உங்களைப் போல வெளியே இருந்து போராடுவது எளிது. ஆகவே மகாகவி பாரதி சொன்னபடி துணிச்சலை சூடி எதிரிகளை பந்தாட உன் எதிரே இருக்கும் லஞ்சத்தை, ஊழலை ஒளித்திட முன்வாருங்கள் உங்கள் முயற்சியால் தேசம் வலுப்படும்.
எவ்வித குறிப்புகளும் வைத்துக் கொள்ளாமல், தங்கு தடங்கலின்றி பாரதியின் கவிதை வரிகளுடன் தெளிவான தமிழில் தேவைப்பட்ட இடத்தில் ஆங்கிலத்தில் சட்ட நுணுக்கங்களை சொல்லியடி இன்னும் இன்னும் பேச மாட்டாரா என்று எதிர்பார்க்கும் விதமாக சகாயம் பேசி முடித்த போது யாருமே சொல்லாமல் அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று நீண்டநேரம் கைதட்டி நல்லதொரு வீரியமிக்க உரைவீச்சை கேட்ட மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். லஞ்சம் தராமல் அரசு சலுகைகளை பெற எண்: 7667100100

No comments:

Post a Comment


web stats

web stats