டிசம்பர் 29ம் தேதி நடைபெறும் நெட் தேர்வில், பார்வையற்றோருக்கென்று தனியாக பிரெய்லி வினா நிரலை தயாரித்து வழங்குமாறு யு.ஜி.சி.,க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு பார்வையற்ற மாற்றுத் திறனாளி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிறப்பு அமர்வு, இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
நீதிபதி வைத்தியநாதன் வழங்கிய தீர்ப்பின் விபரம்: மனுதாரர் மற்றும் அவரின் நிலையை ஒத்த இதர தேர்வர்களின் தேவையை ஈடுசெய்யும் வகையில் பிரெய்லி வினா நிரலை தயாரித்து வழங்குமாறு UGC -க்கு உத்தவிட்டதோடு அல்லாமல், மத்திய சமூக நீதி அமைச்சகத்தின், மாற்றுத் திறனாளிகளுக்கான துறையின் அலுவலக நடவடிக்கைக் குறிப்பில், பிப்ரவரி 26ம் தேதியிட்டு தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளையும், UGC நிவர்த்தி செய்ய வேண்டும். இதன்மூலம், இந்த மனுதாரர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் நெட் தேர்வில் கலந்து கொள்வதற்கு வழியேற்படும்.
மேற்கூறிய நடவடிக்கைகளை UGC எடுக்காவிட்டால், அது புறக்கணிப்பு என்ற வகைப்பாட்டிற்குள் வந்துவிடும். இதன்மூலம், ஏற்கனவே சமூகத்தில் பலவித இன்னல்களை அனுபவித்துவரும் மாற்றுத் திறனாளிகள், இன்னும் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு தீர்ப்பளித்தார்.
மனுதாரர் விபரம்
சென்னை அயனாவரத்தை சேர்ந்த மிரான்டா தாம்கின்சன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் 100% பார்வையிழப்பு மற்றும் கேட்டல் குறைபாட்டால் அவதிப்பட்டு வருகிறார்.
சமூகவியல் மற்றும் பொது நிர்வாகத்தில் முதுநிலைப் படிப்பை முடித்திருக்கும் அவர், பேராசிரியர் ஆகும் ஆவல் கொண்டுள்ளார். எனவே, அதன்பொருட்டு பிரெய்லி முறையிலான வினா நிரலை வழங்குமாறு UGC -க்கு பலமுறை கோரிக்கை அளித்தும், அது கண்டுகொள்ளப்படாமல் போகவே, வழக்கு தொடரப்பட்டது.
No comments:
Post a Comment