மகாராஷ்டிர மாநில கிராமப்புற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பான்மையினர், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மிகக் குறைவான மதிப்பெண் பெறுவதால், அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த மும்பை, ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே, மகாராஷ்டிர மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், பெரும்பான்மையினர் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில், மிகக் குறைவான மதிப்பெண் பெற்று வந்தனர். இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தவறு, ஆசிரியர்களிடம் தான் அதிகமாக இருப்பது, அப்போது தெரிந்தது.
மாணவர்களுக்கு எளிதான முறையில், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை நடத்த, பெரும்பாலான ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை என்ற தகவல் ஆய்வில் தெரியவந்தது. அதிகாரிகளின் ஆலோசனை படி மும்பை, ஐ.ஐ.டி., விஞ்ஞானிகள், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக, சில விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள், நவீன முறைகளில், மாணவர்களுக்கு புரியும் விதத்தில் பாடம் நடத்துவது எப்படி என ஆசிரியர்களுக்கு கற்றுக் கொடுக்க உள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது: ஏழாம் வகுப்பு வரை மாணவர்களை, பெயில் ஆக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுகளைக் கடந்து, வகுப்புகளில் தேர்ச்சியாகும் மாணவர்கள் எட்டாம் வகுப்பில் வந்ததும் சிக்கிக் கொள்கின்றனர். அடுத்த ஆண்டுகளில், அவர்களுக்கு கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் மிகக் கடினமாகி விடுகின்றன.
No comments:
Post a Comment