5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Sunday, 22 December 2013

மதிப்பெண் மட்டும் போதுமா? அரசுப் பள்ளிகள் vs தனியார் பள்ளிகள்-=ஓர் சிறப்புக்கட்டுரை

தனியார் பள்ளிகள் எனப்படும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நாங்கள்தான் தரமான கல்வியைத் தருகிறோம் என்று விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. அரசுப் பள்ளிகளில்தான் தகுதியுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் அரசின் பல்வேறு நலத் திட்டங்களும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் என்று அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதை ஊக்கப் படுத்துகிறார்கள்.

தனியார் பள்ளிகளில் தரமான கல்வி வேண்டுமென்றால் காசு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் இலவச அனுமதியோடு சத்துணவு, சீருடை, இலவசப் பாடப் புத்தகங்கள், உதவித் தொகையாகப் பணம், உயர் கல்வி பெறும்போது பல்வேறு சலுகைகள். இப்போது இலவச சைக்கிள், லேப்டாப் என்று பல சலுகைகள் கூடி விட்டன. ஆனால், கல்வி தரமானதாக இருக்குமா என்று சந்தேகம். இப்போது பெற்றோருக்கு எந்தப் பக்கம் போவது என்று குழப்பம்.

உள்ளூர்ப் பள்ளிகளெல்லாம் சரியில்லை, திருச்செங்கோடு, நாமக்கல், ஊட்டி, கொடைக்கானல், பள்ளிகளில் சேர்த்து விடுங்கள், உங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆவது உறுதி என்று ஒரு குரல் கேட்கிறது. இதற்கு எதிர்காலப் பலன் ஒன்று உண்டு. அதாவது, அதிக மதிப்பெண் பெற்று பெரிய வேலையில் சேர்ந்தபிறகு பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போவதால் முன்பு நான் விடுதியில் தங்கியிருந்ததுபோல் நீங்கள் விடுதிக்குப் போங்கள் என்று பெற்றோரை அனுப்பிவிடுவதுதான்.

ஒரு காலத்தில் எட்டாக்கனியாய் இருந்த கல்வி இப்போது கரை புரண்டு ஓடுகிறது. மகிழ்ச்சி. எல்லோருக்கும் கட்டாயக் கல்வி. அடடா! இந்தக் கட்டுரையின் நோக்கம், மக்கள் தரமான கல்வி, தரமான கல்வி என்று சொல்கிறார்களே அது என்ன? தரமில்லாத கல்வி என்பது என்ன என்பதைப் பற்றி விவாதிப்பதுதான்.

பணம் கொடுத்து வாங்கும் கல்வி தரமான கல்வி! இலவசமாகக் கிடைக்கும் கல்வி தரமற்றது. இதுதான் மக்களின் மன நிலை. ஏனென்றால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 1. அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். 2. நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்கள்.3. ஒழுக்கமாக நடந்து கொள்கிறார்கள்.4. அறிவாளிகளாக இருக்கிறார்கள்.

அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள்தானா என்பது ஒவ்வொரு முறையும் பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வரும்போது தெரிகிறது. தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள் அனைவரும் ஒழுக்கமானவர்கள், மற்றவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்பதை நிரூபிக்க முடியுமா?

சரி மேற்கண்ட தரமான கல்வி என்பதற்கான விளக்கம் ஒரு பக்கம் இருக்க, மாணவர்களின் உடல் நலன் பற்றிய கேள்விக் குறி பெரிதாக எதிரே நிற்கிறது. தரமான கல்வியைக் கொடுக்கும் பள்ளிகளால் தரமான உடல் நலனைக் கொடுக்க முடியுமா?

மதிப்பெண், மதிப்பெண் என்று மாணவர்களை மதிப்பெண் இயந்திரங்களாக்கிய பெருமை மெட்ரிகுலேஷன் பள்ளிகளையே சாரும். போட்டி உலகத்தில் மதிப்பெண் பெறாவிட்டால் மதிப்பிழந்து போவீர்கள் என்று சொல்லிப் பயமுறுத்தி, கட்டாயப்படுத்தி இன்னும் சொல்லப் போனால் பலாத்காரம் செய்து மதிப்பெண் பெற வைத்து மாணவப் பருவத்தைச் சீரழித்தது மெட்ரிகுலேஷன் பள்ளிகள்தான். அவர்களைப் பார்த்து அரசுப் பள்ளி மாணவர்களையும் அதே போல் மதிப்பெண் பெற வைக்க வேண்டிய கட்டாயத்தை ஆசிரியர்கள் மீது அதிகாரிகளும் பெற்றோர்களும் உண்டாக்குகிறார்கள்.

அதிக மதிப்பெண் பெற வைப்பது, அதற்காக உழைப்பது என்பதெல்லாம் முற்றிலும் தவறு என்று நாம் சொல்லவில்லை. அந்த முறைதான் தவறு என்கிறோம். பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலேயே நடத்தத் தொடங்கி விடுவதும், பதினொன்றாம் வகுப்புப் பாடத்தை நடத்தாமலே பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தை இரண்டாண்டு நடத்துவதும் தனியார் பள்ளிகள் செய்கின்ற அநியாயம். அடித்தளம் இல்லாமல் அடுக்கு மாடி கட்டுகிறார்கள். திரும்பத்திரும்பச் சொல்லிப் பழகி நினைவில் வைத்துக் கொள்வதுதான் அறிவுடைமை! (புரிந்து படித்து விரும்பிப் பதியச் செய்து கொள்வதல்ல.)

துல்லியமாக மனப்பாடம் செய்து திரும்ப ஒப்புவித்தால் பாராட்டு உண்டு! இணக்கமாக இல்லை என்றால் தண்டனை உண்டு.

ஓடியாட வேண்டிய பருவத்தில் படி, படி என்று முடக்கிப்போட்டு விடுகிறார்கள்.

காலை எழுந்தவுடன் படிப்பு........ மாலை முழுதும் விளையாட்டு என்பதைக்கூட பாடப் புத்தகத்தில் மட்டும்தான் தெரிந்து கொள்கிறார்கள். அதனைச் செயல் வடிவம் கொடுக்க அவர்களுக்கு அனுமதியில்லை.

பள்ளியில் விளையாட்டு வகுப்பு கால அட்டவணையில் மட்டுமே. விளையாட அனுமதியில்லை. பள்ளிவிட்டு வந்த பின்னர் பெற்றோர்கள் விடுவார்களா? காசு கொடுத்துப் படிக்க வைக்கும் கஷ்டம் அவர்களுக்குத்தானே தெரியும்? கொடுத்த காசுக்கு மதிப்பெண்ணைப் பெற வைக்க அவர்கள் பங்குக்கு படி, படி, என்று உயிரை எடுப்பார்கள்.

விளையாடாமல் இருப்பதானாலும், பாடச் சுமை தரும் மன அழுத்தத்தினாலும் மாணவர்கள் உடல் பருமன் ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். விளையாட்டில் பெறும் வெற்றி தோல்விகளைச் சமமாகக் கருதுவது போல் எதிர்கால வாழ்க்கையிலும் வெற்றி தோல்விகளைச் சமமாகப் பார்க்கும் மனப் பக்குவம் ஏற்படுகிறது. சிறிய தோல்விகளுக்கும் துவண்டு போவதற்கும் வாழ்க்கையையே முடித்துக் கொள்வதற்கும் மதிப்பெண் எந்திரமாய் மாணவர்களை உருவாக்கும் கல்வி முறைதான் காரணம்.

பல தனியார் பள்ளிகளில் இடம் கிடைக்க வேண்டுமானால் பெற்றோர் இருவரும் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய மாத வருமானம் பள்ளி சொல்லும் கட்டணத்தையும் இதர செலவுகளையும் தயக்கமின்றி செய்யத் தயங்காத அளவிற்கு இருக்கிறதா என்று பார்க்கின்றனர்.

பத்தாம் வகுப்பில் வேறு பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குக் கட்டண விலக்குக் கொடுத்தும், ஒரு லட்சம் பணம் கொடுத்தும் தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொண்டு +2 தேர்வில் எங்கள் பள்ளியின் தரத்தைப் பாருங்கள் என்று விளம்பரம் செய்து, இந்த மாணவருக்குக் கொடுத்த பணத்தை மற்றவர்களிடம் பிடுங்கும் தந்திரம் தனியார் பள்ளிகளுடையது.

சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சொல்வதென்னவென்றால், தன்னுடன் பணிபுரியும் சக விஞ்ஞானிகள் பலரும் அவரவர் தாய் மொழியில் படித்தவர்கள்தான் என்பதுதான்.

அரசுப் பள்ளி மாணவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், அவர்களுடைய பின்புலம், வாழ்க்கை முறை, ஆகியவற்றை எண்ணிப் பார்க்க வேண்டும். பள்ளி விட்டுச் சென்று தன் தந்தையுடன் கடையிலோ தாயாருடன் வீட்டில் செய்யும் கூலி வேலையிலோ உதவி செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளி, கல்வியை மட்டுமல்லாமல் உணவு உடை, பேருந்து, புத்தகம் எல்லாம் இலவசமாகக் கொடுக்கிறது. எதுவுமே இலவசமாக வந்தால் இளக்காரம்தானே? ஏதோ பள்ளிக்குப் போய் வந்தான் என்றால் சரி என்பதோடு அவர்களின் கவனம் முடிந்து விடுகிறது.

நம் மக்களின் கலாச்சாரச் சிந்தனையை இங்கே கவனிக்க வேண்டும். உழைத்துப் பெற வேண்டிய அரிசி, மிக்சி, கிரைண்டர் போன்றவற்றை இலவசமாகத் தருவார்களா என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இலவசமாகப் பெற வேண்டிய கல்வியைக் காசு கொடுத்து வாங்குவதுதான் பெருமை என்று நினைக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளில் காசு கொடுத்துப் படிக்க வைப்பதால் அடிக்கடி பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களுடன் பேசி தன்னுடைய குழந்தையைப் பற்றி விசாரிக்கிறார்கள். அரசுப் பள்ளிகளில் இலவசம் என்பதால் அந்தப் பக்கமே தலை காட்டுவதில்லை. உண்மையில் இலவசம் என்றாலும் அது ஒவ்வொரு பெற்றோரும் மற்றோரும் கொடுக்கக் கூடிய வரிப் பணம்தானே? கல்விக்கென்றே பல பொருட்களின் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதே? அதுமட்டுமல்லாமல் குறைந்த அளவாவது கல்விக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் அரசுப் பள்ளிகளிலும் வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்குக் கொடுக்கும் கட்டணம் என்பது அதிகப்படியான இரண்டாவது கட்டணம் என்ற உண்மை இவர்களுக்கு எப்போது புரியும்?

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அங்குள்ள கல்வித்தரம் பற்றியும் கழிப்பிடம், நூலகம், ஆய்வுக்கூடம் போன்ற வசதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளவும், தரமும் வசதியும் சரியில்லை என்றால் கேட்டுப் பெறவும், புகார் செய்யவும், வசதிகளை ஏற்படுத்தச் செய்யவும் உரிமை உண்டு. இன்னும் சொல்லப் போனால், காசு கேட்கும் தனியார் பள்ளிகள் பலவற்றில் பல அடிப்படைக் குறைபாடுகள் இருந்தாலும் கல்வி தரமாக இருக்கிறது என்பதால் (இருப்பதாக நினைத்துக் கொண்டு) வாயை மூடிக் கொண்டு இருந்துவிடுகிறார்கள். வேலூர் அருகே ஒரு தனியார் பள்ளியில் சிமெண்ட் தொட்டியில் குடி நீர் என்று எழுதி வைத்திருந்தது. அதனைக் குடிக்கலாம் என்று வாயில் ஊற்றினால் கடல் நீரைப் போல உப்புக் கரித்தது. அதே பள்ளியின் கட்டடங்களுக்குக் குறுக்கே தாழ்வான உயரத்தில் உயர் அழுத்த மின் கம்பி செல்கிறது. தனியார் பள்ளி வாகனத்தில் ஓட்டை இருந்துதானே மாணவி பலியானாள்?

இது போல பல பள்ளிகளைப் பற்றி பல செய்திகள் உண்டு. குறை சொன்னால் தன் பிள்ளைகளுக்குச் சரியாகக் கற்றுக் கொடுக்க மாட்டார்கள் என்ற பயத்தில் பேசாமல் வந்து விடுகிறார்கள்.

அரசுப் பள்ளிகளைப் பற்றி பத்திரிகைகளில் எழுதுபவர்கள் இதுபற்றி ஏன் கண்டு கொள்வதில்லை. அடிப்படை வசதிகள் என்றால் வகுப்பிற்கு மாதம் 1000 ரூபாய் கட்டணம் வாங்கும் பள்ளியின் வசதியும் 100 ரூபாய் வாங்கும் பள்ளியின் வசதியும் வேறுபடுவது போல் அரசுப் பள்ளிகளின் வசதிகளும் மாறுபடும்தான். வசதி இல்லை என்றாலும் சும்மா இருக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.
கிராமம் முதல் சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள எல்லா ஆங்கில வழிப் பள்ளிகளிலும் படித்த மாணவர்கள் அனைவருக்கும் ஆங்கிலம் நன்றாகத் தெரியுமா? முக்கியமாக ஆங்கிலத்தில் நன்றாகப் பேச முடியுமா? ஏனென்றால் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள்கூட ஆங்கிலம் எழுதவும் படிக்கவும் செய்கிறார்கள். பேசுவதுதான் முக்கியப் பிரச்சினை.

ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளுக்குச் செல்லும் பெரும்பாலானவர்கள் ஆங்கில வழியில் படித்தவர்கள் என்ற விவரம் எல்லோருக்கும் தெரியும்தானே?
ஆங்கிலம் பேசக் கற்றுக் கொள்வதற்கு ஆங்கில வழியில் படிப்பதைவிட ஆங்கிலோ இந்தியர்கள் அருகில் இருந்தால் அவர்களுடன் பழகிக் கற்றுக் கொள்ளலாம். ஆங்கிலோ இந்தியர்கள் வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்க்கும் பெண்கள் எவ்வளவு ஸ்டைலாக இங்கிலீஷ் பேசுகிறார்கள் தெரியுமா? அவர்கள் அறிவாளிகள் வரிசையில் வருவார்களா?

ஒழுக்கம் என்பதைப் பற்றிப் பேசும்போது அவர்கள் அணியும் உடையைப் பற்றி நிறைய பேர் பேசுவார்கள். வெப்பப் பிரதேசத்தில் ஷூ, டை அணிந்து கொள்வது ஒழுக்கமா? அவஸ்தையா? இன்னொன்று ஆங்கிலத்தில் பேசினால் கெட்ட வார்த்தையாகத் தெரியவில்லையோ என்னவோ? , என்பதும் இன்னும் பலவும் அடிக்கடி ஆங்கில வழி மாணவர்கள் பேசும் வார்த்தைகள்.

இன்றைக்கு டேட்டிங் என்று சொல்லி ஊர் சுற்றுவதும் யார்? இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? சில பள்ளி முதலாளிகள், தன்னுடைய பள்ளி மாணவர்களுக்குச் சொல்லும் அறிவுரை என்ன தெரியுமா? அரசுப் பள்ளி மாணவர்களுடன் சேராதீர்கள். அவர்கள் ஒழுக்கமில்லாதவர்கள், அரசுப் பள்ளி மாணவிகள் முறையற்ற உறவால் கர்ப்பமாகி விடுகிறார்கள் என்று நவீன தீண்டாமையைச் சொல்லித் தருகிறார்கள். கல்விக்கட்டணம் செலுத்த முடியாதவர்களை மனிதர்களாகவே மதிக்காமல் அபாண்டமான குற்றச்சாட்டைச் சொல்லி மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் இந்தப் புதிய மனுவாதிகள், கல்வியில் வர்ணபேதம் இருக்க வேண்டும் என்கிறார்கள்.

அரசுப் பள்ளிகள் பற்றிய குற்றச்சாட்டிற்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று பார்த்தால், மவுனம்தான். தனியார் பள்ளி ஆசிரியர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இவர்களுக்குச் சம்பளம் தரப்படுகிறது. (இது அதிக சம்பளம் என்று சொல்லவில்லை.) ஆனால் அவர்கள் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை தன்னுடைய அறிவையும் தகுதியையும் அதிகப்படுத்திக்கொள்ள நூல்களை வாங்கிப் படிக்கிறார்களா? என்றால், இல்லை! இதனால் இவர்களுக்கே இவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் தன்னுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். இதைவிட அசிங்கம் இவர்களுக்கு இல்லை.

இப்போது ஆசிரியர்களாக இருக்கும் பலரும் ஆங்கில வழியில் தனியார் பள்ளியில் படித்தவர்கள்தான். இவர்கள் ஏன் உயர்ந்த பதவிக்குப் போக முடியவில்லை? அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்வாக முடியாமல் போன பல்லாயிரக்கணக்கான பேரும் தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் படித்தவர்கள்தான். அவர்களுக்கு ஆங்கிலமும் சரியாகத் தெரியவில்லை. தமிழும் சரியாகத் தெரியவில்லை. பொது அறிவில் பொதுவாக அக்கறையில்லை.

இப்போது அரசு ஒரு திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதாவது, அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆரம்பிக்கப் போகிறார்களாம். தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்று புரட்சிக் கவிஞர் சொன்னது போல் தமிழ்நாட்டின் தமிழ்ப் பள்ளிகளிலும் தமிழ் இல்லாமல் போகப் போகிறது. கல்விச் சந்தையில் அரசுக்கும் தனியாருக்கும் நடக்கும் போட்டியில் விலைபோகாச் சரக்காகிப் போகுமா தமிழ்?

ஆங்கிலத்தை அறிந்து கொள்வதற்குப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டுமே தவிர பாட வழியையே மாற்றுவது பலன் தராது. தாய் மொழியை இலக்கண வகுப்பை நடத்திவிட்டுப் பிறகு பேசக் கற்றுக் கொடுப்பதில்லை. வீட்டருகில் தெலுங்கோ இந்தியோ பேசுகிறவர்கள் இருந்தால் அவர்கள் பேசுவதைக் கவனித்து நாமும் அந்த மொழியை இயல்பாகக் கற்றுக் கொள்கிறோம். அதுபோலவே ஆங்கிலத்தைப் பேசுவதிலிருந்து இயல்பாகக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.

அதை விட்டு, முதலில் எடுத்தவுடனே டென்ஸ், வாய்ஸ், என்று ஆரம்பித்தால் நம் மாணவர்களுக்கு டென்ஷனில் வாய்ஸ் வரமாட்டேன்கிறது. அயல் மொழியான ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்ளும் வேகத்தில் தாய் மொழியைத் தவற விட்டுவிடக் கூடாது. தாய் மொழியைக் காப்பாற்றாத தறுதலை இனமாகத் தமிழினம் தாழ்ந்துவிடக் கூடாது.

No comments:

Post a Comment


web stats

web stats