5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Sunday, 22 December 2013

ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பாக 180 வழக்குகள் தாக்கல்: டி.ஆர்.பி., தவிப்பு

சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து புலம்பி வருகிறது.
கடந்த காலங்களில் ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து, சில மாதங்களுக்குள் இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும் நடத்தி முடித்து இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு தலை சுற்றிவிடுகிறது.
ஒரு தேர்வு நடந்தால், அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்கு மேல் வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள் கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்து இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் குறைந்தபாடில்லை
.
ஒரு மதிப்பெண்ணில், ஒருவரின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் நிலை இருப்பதால் தேர்வர்களும், முடிந்த வரை போராடுகின்றனர். ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி இன்று வரை முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், சில கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதனால், தமிழ் பாடத்தின் தேர்வு முடிவை வெளியிட கோர்ட் தடை விதித்தது.
இந்த வழக்கில் கடந்த வாரம், தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட கோர்ட் உத்தரவிட்ட நிலையில், புதிதாக இரு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் பாட தேர்வு விவகாரம், மீண்டும் தொங்கலில் உள்ளது.
இதற்கிடையே ஆகஸ்ட்டில் நடந்த டி.இ.டி., தேர்வு விவகாரமும், இடியாப்ப சிக்கலாகி உள்ளது. இத்தேர்வின் முடிவு, நவ.,5ல் வெளியானது. 90 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி என்ற நிலையில், 88, 89 மதிப்பெண்கள் பெற்று, ஆயிரக்கணக்கான தேர்வர்கள் தோல்வி அடைந்தனர். "சரியான விடைகளுக்கு, உரிய மதிப்பெண் வழங்கவில்லை" என தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். எனினும், டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் காரணமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். தற்போது, வழக்குகளின் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், மேலும் கூறியதாவது:
பாட வாரியான நிபுணர் குழுக்கள் தான், கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. நாங்கள், நேரடியாக, இதை தயாரிக்கவில்லை. ஆனாலும், மனித தவறுகள் நடந்து விடுகின்றன. தவறான விடை, கேள்வி என தெரிந்தால், அதுகுறித்து மீண்டும் ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கிறோம். அதன்பிறகும் "உரிய மதிப்பெண் வழங்கவில்லை" என தேர்வர் கூறுகின்றனர்.
எதற்கு எடுத்தாலும், வழக்கு போடும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு வழக்கை தாக்கல் செய்ய 10,000 ரூபாய் செலவாகும். ஆளுக்கு 2,000 ரூபாய் என ஐந்து பேர் சேர்ந்து, ஒரு வழக்கை போட்டு விடுகின்றனர். டி.இ.டி., தேர்வு தொடர்பாக, குழுவாகவும், தனித்தனியாகவும், பலரும் வழக்கு தொடர்ந்ததால் வழக்குகளின் எண்ணிக்கை, மலை போல் குவிந்துள்ளது.
"அனைத்து வழக்குகளையும், ஒன்றாக எடுத்து, விசாரிக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்து உள்ளோம். தற்போதுள்ள நிலையை பார்த்தால், டி.இ.டி., தேர்வோ, முதுகலை ஆசிரியர் தேர்வோ, எந்த தேர்வாக இருந்தாலும், இப்போதைக்கு, இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை. வரும் காலங்களில், வழக்கு பிரச்னை வராத அளவிற்கு, தேர்வை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment


web stats

web stats