கோர்ட்டுக்கு தவறான தகவல்களை அளித்து, பொய் சொன்னதற்காக பள்ளி ஆசிரியைக்கு, டில்லி ஐகோர்ட் வினோதமான தண்டனையை அளித்துள்ளது. டில்லி காந்தி சமாதியில் தினமும், நான்கு மணி நேரம் வீதம், ஒரு வாரத்திற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.
டில்லி மாநகராட்சி பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்ப்பவர், பாரா காடூன். இவரது, கணவர் பெயர் ராகேஷ், கடந்த மாதம், 27ம் தேதி, டில்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:
நானும், என் மனைவியும் காதலித்து, வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், இந்த திருமணத்தை, பாராவின் குடும்பத்தார் அங்கீகரிக்கவில்லை. என் மனைவியை பிரித்து, அவரது தந்தை, வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அவரை மீட்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இதையடுத்து, பாராவை ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பாரா கோர்ட்டில் ஆஜராகி, அளித்த வாக்குமூலத்தில், "எனக்கும், ராகேஷுக்கும் திருமணம் நடைபெறவில்லை. ராகேஷ் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானவை" என கூறினார்.
இதுகுறித்து விசாரணை நடத்த டில்லி போலீசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், பாரா திடீரென கோர்ட்டில் ஆஜராகி, கூறியதாவது: தவறான வாக்குமூலம் அளித்து விட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். எனக்கு தெரியாமல், திருமணம் குறித்த தகவலை ராகேஷ் வெளியிட்டதால் சமூகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், திருமணத்தை மறுத்து வாக்குமூலம் அளித்தேன். கோர்ட் நடவடிக்கைகள், குறித்து எனக்கு போதிய அறிவு இல்லை. இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
பாராவின் விளக்கத்தை, நீதிபதிகள், கைலாஷ் கம்பீர், இந்தர்மீத் கவுர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நிராகரித்தது. இது தொடர்பாக, அவர்கள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
கோர்ட்டை பாரா அவமதித்து உள்ளார். ஒரு பள்ளி ஆசிரியைக்கு கோர்ட் குறித்து, தெரியாது என்று கூறுவதை நம்ப முடியவில்லை; இதை ஏற்க முடியாது. அவரது நடவடிக்கை சந்தேகத்திற்குரியதாகவும், கண்டனத்துக்கு உரியதாகவும் உள்ளது. தன் தவறை நியாயப்படுத்துவது போல பேசியுள்ளார். கோர்ட்டை அவமதித்ததற்காக அவருக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை, அவர் காந்தி அறக்கட்டளையில், ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும்.
டில்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியில் தினமும், நான்கு மணி நேரம் வீதம், ஒரு வாரத்திற்கு மன்னிப்பு கேட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும்.இதை, அப்பகுதியில் உள்ள, போலீசார் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவில் கூறியிருந்தனர்.
No comments:
Post a Comment