5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Sunday, 22 December 2013

விடுமுறை: இது வாழ்கைக்கான களப்பயிற்சி

தேர்வு காலம் நெருங்கிவிட்டாலே தேர்வு பயம் மாணவர்களை எந்த அளவுக்கு பதட்டம் கொள்ள வைக்கிறதோ, அதை விட அதிக அளவு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது அதற்கு பின்னர் வரும் விடுமுறை. ஆனால் பெற்றோருக்கோ கவலையை ஏற்படுத்திவிடுகிறது.

ஏனென்றால் பள்ளி, பாடம், பரீட்சை என்று பரபரப்பாக ஒரு இயந்திர வாழ்க்கையில் பிள்ளைகள் இருந்துவிட்டு, சுதந்திரம் கிடைத்தவுடன் தேவையில்லாத நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, செலவு வைப்பது, வீட்டில் உடன்பிறந்தோருடன் சண்டை சச்சரவில் ஈடுபடுவது, அதை செய்து கொடு, இது வேண்டும் என் பல வகை உண்வு பதார்த்த வகைகளை கேட்டு அடம் பிடிப்பது என பிள்ளைகளால் விடுமுறைக்காலங்களில் பெற்றோர் படும் பாடு நாம் அறிந்ததே.
பல பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அவர்கள் விரும்புகிறார்களோ, இல்லையோ இசை வகுப்புகள், நாட்டிய வகுப்புகள், இதர பயிற்சி வகுப்புகள் என விடுமுறை காலத்திலும் வாட வைத்துவிடுகின்றனர். பெற்றோர்கள் பெரும்பாலானோரின் கருத்தும் "படிக்கும் வயதில் அவர்களுக்கு படிப்பது மட்டும் தானே வேலை" என்பதாகத்தான் இருக்கிறது.
படிப்பதுதான் வேலை என்றாலும் கற்றுக்கொள்வது என்பது நாம் இருக்கும் நகரத்தில் மட்டும் தான் என்பதாகவோ அல்லது இதனை விட பொருளாதாரத்தில் உயர்ந்த இடத்தில் தெரிந்துகொள்வது என்பதாகவோ நினைப்பது தவறு. வாழ்க்கை என்பது பெரும் கட்டடங்களில் குளிரூட்டப்பட்ட அறைகளில் வாழ்வது அல்ல. அதன் தொடர்புடைய தேவைகளுக்காக மட்டும் கல்வி கற்றால் போதும் என்று நினைப்பதும் தொலைநோக்கு பார்வை இல்லாததுதான்.
ஒரு மனிதன் நேர்மையாக வாழ்வதற்கு தேவையான அனைத்து விசயங்களையும், தெரிந்துகொள்ளக்கூடிய வாய்ப்புகள் அனைத்துமே கற்கக்கூடியதுதான். அதற்கான அதிக வாய்ப்புகளை பெற்றுத்தருவது விடுமுறைக்காலங்கள் தான்.
இன்றைய நகர்ப்புற மாணவர்களுக்கு கிராமங்களைத் தெரிவதில்லை, விவசாயியை. ஆறுகளை, குளங்களை, பரபரப்பில்லாத புறநகர், கிறாமப்புற வாழ்க்கை முறைகள் தெரிவதில்லை. மற்ற மாவட்டங்களின் வசதியின்மையும், வெயிலும் வெயில் சார்ந்த வாழ்வும் புரிவதில்லை. பாரம்பரிய பழக்க வழக்கங்கள், பெரியோருடைய பரிவு ஆகியவற்றை உணர்வதுமில்லை.
நாம் நலமாக வாழ பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ளவர்கள் எத்தனை பேர், நமக்காக எப்படி உழைக்கிறார்கள் என்பதை அறிந்திருப்பதுமில்லை. ஆனால் இவையெல்லாம் கிராமப்புறங்க்ளிலிருந்து வந்த பெற்றோருக்கு தெரியும். ஆனாலும் தங்கள் பிள்ளைகள் அதனை தெரிந்துகொள்ளவேண்டும், என எண்ணாமல் அந்த வாழ்க்கை கடினம் என்று தடை போடுவதில்தான் குறியாக இருக்கின்றனர்.
கடும் போட்டியும், பொருளாதாரச் சிக்கல்களும், சமூகப் பிரச்சனைகளும் பெருகி நவீன வாழ்க்கையை பணம் ஒன்றைச் சுற்றியே வாழ கட்டயாப்படுத்திவிட்டது. இயந்திரத்தனமான இந்த வாழ்க்கையில் மனம் உற்சாகம் அடைவதற்கும், மனிதத்தன்மையோடு வாழ்வதற்கும் நாம் வந்த அடிப்படை வாழ்வு தெரிந்திருக்க வேன்டியது அவசியம்.
இளமை காலத்தின் மகிழ்ச்சியை மட்டும் கருத்தில்கொள்ளாமல், முதுமையிலும் மகிழ்ச்சியுடன் வாழ சொந்த உறவுகளையும், சொந்த ஊரையும், சிறந்த பழக்கவழக்கங்களையும் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த முயற்சி செய்வோம். மாணவர்களாகிய நீங்களும், தெரியாத இது போன்ற விசயங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வமுடன் தயாராகுங்கள்.
ஏனெனில் நீங்கள் எதிர்காலத்தில் வேலையில் மட்டுமல்லாமல் வாழ்க்கையிலும் வெற்றி பெறவேண்டுமானால் நகர்ப்புறத்தை கட்டாயம் கடந்து சென்றிருக்கவேண்டும். ஏனெனில் இது வாழ்க்கைக்கான களப்பயிற்சி.

No comments:

Post a Comment


web stats

web stats