5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Saturday, 21 December 2013

ஆங்கில மோகம் - கிராமப் பள்ளிகள் பாதிப்பு

தெருவெங்கும் நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் பெருகியுள்ள நிலையில் தமிழ்வழிக் கல்வியைப் போதிக்கும் பள்ளிகள், விரைவில் மூடப்பட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
இலவசப் புத்தகம், காலணிகள், சீருடைகள், மதிய சத்துணவு,பஸ் பாஸ், கல்விக் கருவிகள் என எண்ணற்ற சலுகைகளை அரசுப்பள்ளி மற்றும் நிதியுதவிப் பள்ளிகளில் படித்துவரும் மாணவர், மாணவிகளுக்கு அரசு வழங்கி வருகிறது. இருப்பினும் ஆங்கிலவழிக் கல்வி போதிக்கும் நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் பயில வேண்டும் என நடுத்தர மற்றும் உயர்தர வருமானப் பிரிவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது, குறைந்த வருவாய்ப் பிரிவினரும் நினைப்பதால் தமிழ்வழிக் கல்வி நிலையங்களில் மாணவர்களின் சேர்க்கை சதவிகிதம் குறைந்து வருகிறது.
அதுவும் குறிப்பாக, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள்தான் இப் பிரச்னையில் பெரிதும் சிக்கித் தவிக்கின்றன. இதன் காரணமாக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கானல் நீராக மாறி வருகிறது. இதன் காரணமாக அரசுப்பள்ளிகள் மாணவர்களைச் சேர்க்க பல்வேறு மந்திர, தந்திரங்களைக் கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்கள் இல்லாவிட்டால் ஆசிரியர்கள் "டெப்ளாய்மெண்ட்' மூலம் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் சூழல் உருவாகும் என்பதாலும், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கும் பணியிடங்களை இழக்கும் அபாயம் ஏற்படும் நிலை உருவாவதாலும் "எப்படியாவது' தேவைப்படும் மாணவர்களைச் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் அரசு நிதியுதவிப் பள்ளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது.
இதன் காரணமாக அரசு நிதியுதவிப் பள்ளி ஆசிரியர்கள் ஊர், ஊராகச் சென்று அங்குள்ள பிள்ளைகளைத் தங்கள் பள்ளிகளில் கொண்டுவந்து சேர்க்க முயன்று வருகின்றனர். இதற்காக விதவிதமான இலவசங்களையும் பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு அளித்து வருகின்றன.
பெரும்பாலான பள்ளிகள் இலவச வேன் வசதி, இலவச கணினிப் பயிற்சி, எழுதுபொருள்கள் என பல இலவசங்களை அறிவித்து மாணவர்களை ஈர்த்து வருகின்றன. சில பள்ளி நிர்வாகங்கள் (நடுநிலைப்பள்ளி) முன்பு படித்த பள்ளிகளுக்கு (தொடக்கப்பள்ளி) நேரடியாகச் சென்று மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்கு தாங்களாகவே பணம் கொடுத்து அந்த மாணவர்களைத் தங்கள் பள்ளியில் சேர்த்து வருகின்றன.
மாணவர் சேர்க்கை குறைந்தால் ஜூனியர் ஆசிரியர்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என்பதால், மாணவர்களைத் தேடிப் பிடிப்பதற்கான செலவில் "பெரும்பகுதியை' அந்த குறிப்பிட்ட "ஜூனியர்' ஆசிரியர்தான் கொடுக்க வேண்டிய நிலையுள்ளதாகவும் (ஒரு சில பள்ளிகளில்) கூறப்படுகிறது.
இப்படி மாணவர்களின் தேடுதல் வேட்டையில், ஒரே பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளி நிர்வாகங்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே தேவையற்ற மனக்கசப்பும், பிரச்னையும் ஏற்பட்டு வருவதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே பள்ளிகளில் நியமிக்கப்பட வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக, அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள், நிரப்பப்படாமல் உள்ளன. இந்நிலையில் மாணவர்கள் சேர்க்கையும் குறைந்து வருவதால் பல பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கிராமங்களில் செயல்பட்டுவரும் தொடக்கப்பள்ளிகள் மூடப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்படலாம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

No comments:

Post a Comment


web stats

web stats