முதுகலை தமிழ் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடுவதில், மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,891 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜூலையில், போட்டித் தேர்வு நடந்தது. தமிழ் பாடம் தவிர, இதர பாடங்களுக்கான தேர்வு முடிவை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்ப்பையும், நடத்தி முடித்துவிட்டது. "தமிழ் பாட கேள்வித்தாளில், சில பிழையான கேள்விகள் இடம் பெற்றன; இதற்கு, உரிய மதிப்பெண் தர வேண்டும்' என வலியுறுத்தி, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சில தேர்வர்கள், வழக்கு தொடர்ந்தனர். இதன் காரணமாக, தமிழ் பாடத் தேர்வு முடிவை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை. இந்நிலையில், சமீபத்தில், தமிழ் பாடத் தேர்வு முடிவை வெளியிட, உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது. ஆனாலும், இதுவரை, தமிழ் பாடத் தேர்வு முடிவு வெளியாகவில்லை. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறுகையில், "மதுரை கிளையில், வழக்கு முடிந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், சிலர், வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில், முடிவு வந்தால் தான், தமிழ் பாடத் தேர்வு முடிவை வெளியிட முடியும்' என, தெரிவித்தது. இதனால், இப்போதைக்கு, தமிழ் பாடத் தேர்வு முடிவு வெளி வராது என, தெரிகிறது.
No comments:
Post a Comment