திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணியாளர் பட்டியல் தயாரிப்பதற்கான விண்ணப்பங்கள் பெற, ஒரே நேரத்தில் 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குவிந்ததால், குழப்பம் ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான பணியாளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில், 2,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். கூட்ட அரங்கில், 300 பேர் மட்டும் அமர முடியும்; இதனால், ஆசிரியர்கள் அரங்கை விட்டு வெளியேறி, கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்தனர். அதன்பின், அவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தவறு இருந்தால் நடவடிக்கை:
கூட்டத்தில், கலெக்டர் வெங்கடாசலம் பேசியதாவது: விண்ணப்பங்களில் ஊதிய விகிதங்களை கண்டிப்பாக எழுத வேண்டும். அப்போது தான், ஊதிய அடிப்படையில் பணியிடம் ஒதுக்க முடியும். கல்வித்துறை அதிகாரிகள் சிலர், தேர்தல் பணியாளர் பட்டியல் தயாரிக்கும்போது, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் பெயரை சேர்ப்பதில்லை என, புகார் எழுந்துள்ளது. இதுபோன்ற தவறு கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment