மருத்துவம், பொறியியல், வேளாண்மை உள்ளிட்ட பட்டப்படிப்புகள் பற்றி தெரிந்துகொண்டோம். இவற்றுக்கு இணையாக கலை, அறிவியல் பட்டப்படிப்புகளுக்கும் சிறந்த எதிர்காலம் உண்டு. மருத்துவம், பொறியியல் மட்டுமே சிறந்த படிப்புகள் என்பது மாயை. கல்வியில் ஏற்றத்தாழ்வு கிடையாது. கற்பதிலும் அதை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவதிலுமே வெற்றிக்கான சூட்சுமம் இருக்கிறது.
பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றால் கலை, அறிவியல் படிப்பைத் தேர்வு செய்வதும், அதிக மதிப்பெண் பெற்றால் அறிவியல், கணிதம் பாடப் பிரிவைத் தேர்வு செய்வதுமே நடைமுறையில் உள்ளது. ஆனால், எதிர்காலத்தில் எந்த துறையில் சாதிக்க விரும்புகிறோம் என்கிற சுய ஆர்வத்தின் அடிப்படையிலேயே உங்களது பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.
கலை, அறிவியல் பாடப் பிரிவை பிளஸ் 1 வகுப்பில் தேர்வு செய்பவர்கள், குறிப்பாக கணிதம், தொழில் கணிதவியல் பாடப்பிரிவை தேர்வு செய்வது, எதிர்கால பட்டப் படிப்புக்கு உகந்ததாக அமையும். தரம் வாய்ந்த பெரிய கல்லூரிகளில் கணிதம், தொழில் கணிதவியல் எடுத்த மாணவர்களை, கலை, அறிவியல் பட்டப் படிப்புக்கு சேர்த்துக்கொள்கின்றனர். கணிதம் வராது என்று நமக்கு நாமே தாழ்வு மனப்பான்மை கொள்ளாமல், திட்டமிட்டுப் படித்தால் வெற்றி நிச்சயம்.
கலை, அறிவியல் துறையில் ஏராளமான துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. பி.ஏ. பொருளாதாரம், பி.காம்., பி.சி.ஏ., பி.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ. படிப்புகள் காஸ்ட் அக்கவுன்டன்சி வொர்க், கம்பெனி செகரட்டரிஷிப் உள்ளிட்ட துறைகளில் நல்ல வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன. சி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., தேர்வில் வெற்றி பெறுவது கடினம் என்ற எண்ணத்தை உடைத்தெறியுங்கள். ஆர்வம் மற்றும் கவனத்துடன் படித்தால் நிச்சயம் சாதிக்கலாம்.
கலை, அறிவியல் பட்டப்படிப்பில் விஷுவல் கம்யூனிகேஷன், பேஷன் டிசைனிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங், ஜெர்னலிஸம், எலக்ட்ரானிக் மீடியா உள்ளிட்ட படிப்புகளை தேர்வு செய்து படிப்பதன் மூலம் எதிர்கால வாழ்க்கை சிறக்கும். இதில் பட்ட மேற்படிப்புகளான எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் உள்ளிட்டவை படிக்கலாம். பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, தமிழ், பொருளாதாரம் படிப்பதன் மூலம் ஆசிரியர் பணி பெறலாம். சட்டத் துறையிலும் சாதிக்க முடியும். பி.ஏ. கார்ப்பரேட் செகரட்டரிஷிப், பி.ஏ. கோ-ஆபரேட்டிவ் உள்ளிட்டவை எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடியவை.
கலை, அறிவியல் படிப்புகளில் உள்ள பல்வேறு வகையான பாடப் பிரிவுகள், அதைப் படிப்பதால் எந்தத் துறையில், எவ்வாறு சாதிக்க முடியும் என்பதை வரும் நாட்களில் அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment