பத்தாம் வகுப்பு படிப்பதை ஏதோ மிகக் கடினமான காரியமாக மாற்றி விடுகிறது நமது சமூகம். இது மாணவர்களுக்கு ஒருவித உளவியல் அச்சத்தையும் தந்துவிடுகிறது. இதைப் போக்கி மாணவர்களின் சுமையைக் குறைப்பதற்காக 10 வகுப்பிற்கு முப்பருவத் தேர்வு முறையை கொண்டு வருவது குறித்த ஆய்வினை மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது.
மத்தியப் பாடத்திட்டத்தில் உள்ளது போல முப்பருவ தேர்வுகள் நடத்தி மாணவர்களை மதிப்பிடலாம். இதனால் மாணவர்களின் அச்சம் குறையும். தனியார் கல்வி நிறுவனங்கள் தனிப்பயிற்சி (டியூசன் ) என்ற பெயரில் மாணவர்களிடம் பணம் வசூலிக்கும் முறைக்கும் ஒரு முடிவு வரும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
‘‘கல்வியாண்டில் 210 வேலை நாட்கள் மூன்று செமஸ்டருக்கு 70+70+70 நாட்களாகப் பிரிக்கப்படும். படிக்க வேண்டிய பாடங்கள் குறைவாக இருக்கும். பாடம் தொடர்பான தகவல்களை சேகரித்தல், அவற்றை புரிதல், புரிந்து கொண்ட அறிவை செயல்படுத்திப் பார்த்தல், சரியா, தவறா என சோதித்து அறிதல், அவ்வாறு புரிந்து கொண்ட விஷயத்தில் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி புதுமை செய்தல், அந்த விஷயத்தை மெருகேற்றுதல் என கற்றல் எனும் நிகழ்வில் ஆறு படிநிலைகளில் மாணவர்களின் அறிவு திறனாக மாற்றப்படுகிறது.
மாணவர்கள் தங்களது பிரச்னை மற்றும் சமூகம் சார்ந்து சிந்திப்பதற்கான வாய்ப்பு அதிகம். வளர் இளம் பருவத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் தங்களது உடல் சார்ந்த மாற்றங்கள், உள்ளம் சார்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள முடியும். அதிகபட்ச டென்சனால் மன அழுத்தத்துக்கு ஆளாவது மற்றும் மதிப்பெண் குறைந்ததற்காக தற்கொலை செய்து கொள்ளும் போக்கும் தடுக்கப்படும். கற்றலில் சிரமப்படும் குழந்தைகள், தனித்திறனில் அதிக ஆர்வம் உள்ள மாணவர்கள் இம்முறையில் ஆர்வத்துடன் படிக்க வாய்ப்பு கிடைக்கும். பள்ளிக்கே வர பிடிக்காத குழந்தைகள் கூட பாடத்தை விரும்பும் நிலை உருவாகும்” என்று மேலும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment