5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Wednesday, 18 December 2013

தனியார் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி வசூல் வேட்டை

கோவை மாவட்டத்தில் தனியார் நர்சரி பிரைமரி பள்ளி நிர்வாகிகள் முதல்வர்களை மிரட்டி தொழிலாளர் நலவாரிய அலுவலர்கள் என்ற பெயரில் முழுவதும் வெள்ளை நிறத்தில் உடை அணிந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் நேற்று வசூல் வேட்டையை நடத்தியுள்ளது குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருப்பினும், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் நிதி வசூலிப்பதாக இருப்பினும் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்ற பின்பே பள்ளிகளுக்கு நேரடியாக செல்ல இயலும்.
குறிச்சி பகுதிகளில் உள்ள நான்கு நர்சரி, பிரைமரி பள்ளிகள் மற்றும் பொள்ளாச்சி ரோட்டில் அமைந்துள்ள மேலும் சில பள்ளிகளில் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், அங்கீகார எண்16/851149, தேனாம்பேட்டை, ஜீவா இல்லம், சென்னை- 18 என்ற முகவரியை கொண்ட அடையாள அட்டையை காண்பித்து தொழிலாளர் நலவாரிய மேம்பாட்டிற்கு நான்கு பேர் கொண்ட குழு நிதி கேட்டுள்ளனர்.
முதலில் சந்தேகத்தின் பேரில் தரமறுத்த பள்ளி நிர்வாகிகளை மிரட்டி ரூபாய் 500 முதல் 1000 வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகிகள் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாநில பொது செயலாளர் கிருஷ்ணராஜ் கூறுகையில், "சில பள்ளிகளில் நேற்று மதியம் முதல் தொழிலாளர் நலவாரியம் என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்ததாக புகார் பெறப்பட்டது. அதை தொடர்ந்து தொழிலாளர் நலவாரிய அலுவலகத்திலும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திலும் விசாரித்ததில் அதுபோன்று எந்த நபர்களுக்கும் அனுமதி வழங்கவில்லை என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது" என்றார்.
முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், "நர்சரி பிரைமரி பள்ளிகளை மிரட்டி பணம் வசூலித்துள்ளனர். முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியின்றி யாரையும் பள்ளிக்குள் அனுமதிக்கவேண்டிய அவசியம் இல்லை. இதுகுறித்து பலமுறை பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சில பள்ளி நிர்வாகிகள் தவறுதலாக விசாரணையின்றி, மர்ம நபர்கள் கேட்ட தொகையை வழங்கியுள்ளனர். இதனால், அனைத்து பள்ளிகளுக்கும் இச்சம்பவம் சார்ந்த எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற எந்த நபர்களின் மிரட்டுதலுக்கும் அச்சப்பட தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment


web stats

web stats