5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Wednesday, 18 December 2013

அரசு பணி: அரசு பள்ளிகளில் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஏமாற்றம்.

அரசு பள்ளிகளில், துப்புரவாளர் பணியில் சேர்ந்தவர்களுக்கு, மாத சம்பளமாக, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது; அரசுப் பணி என,வேலையில் சேர்ந்தோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், கடந்த ஆண்டு, அரசு பள்ளிகளில், 5,000 துப்புரவாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இரண்டு பணியிடங்களுக்கும், 10ம் வகுப்பு கல்வித்தகுதி என்ற போதிலும், சம்பள விகிதம் வேறுபட்டிருந்தது. இரவு காவலர் பணிக்கு, அடிப்படை சம்பளம், 4,800 என, கால முறை ஊதியத்திலும், துப்புரவாளருக்கு அடிப்படை சம்பளம், 1,300 என, சிறப்பு கால முறை ஊதியத்திலும் பணியிடங்கள் நிரப்பப்பட்டன.


இதில், இரவு காவலர் பணியிடங்கள், 1984க்கும், 3,026 துப்புரவாளர் பணியிடங்களுக்கும், அந்தந்த மாவட்டங்களில், நேர்காணல் நடத்தி, தேர்வு செய்யப்பட்டனர். பணியில் சேர்ந்து, ஓராண்டு ஆன நிலையில், அனைத்து படிகளையும் சேர்த்து, மாத சம்பளமாக, 3,000 ரூபாயை தாண்டாத நிலையில், அரசு பணி என்ற கனவுடன் வந்த துப்புரவாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.அரசு பள்ளி துப்புரவாளர் சிலர், கூறியதாவது: உள்ளூர் அமைச்சர் மற்றும் கட்சி பிரமுகர்கள் பரிந்துரைபடி, துப்புரவாளர் மற்றும் இரவு காவலர் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். துப்புரவாளர் பணியிடத்துக்கு, இரண்டு லட்ச ரூபாய் வரை, சிபாரிசு செய்ய, வசூலிக்கப்பட்டது. சம்பளம் குறைவாக உள்ளதே என, தயங்கியவர்கள் கூட, "சில மாதங்களில், சம்பள விகிதம் மாறிவிடும்' என, அரசியல்வாதிகளின் உறுதிமொழியை நம்பி, துப்புரவாளர் வேலைக்கு வந்தனர். இதில் தேர்வு பெற்றவர்களுக்கு, 10ம் வகுப்பு கல்வித்தகுதி என்ற போதும்; ஆனால், பலரும் பட்டப்படிப்பை முடித்தவர்கள். இதனால், துப்புரவாளர் பணிக்கு மட்டுமின்றி, அலுவலக உதவியாளர் போல், அனைத்து வேலைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர்.

காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, பணி புரிந்தாலும், அனைத்து படிகளுடன் சேர்த்து, 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை வைத்து, குடும்பம்நடத்த முடியாது என, பலரும், விரக்தியடைந்து, வேலையை விட்டு சென்று விட்டனர். நம்பி ஏமாந்து, தற்கொலை செய்து கொண்டவர்களும் உள்ளனர். இதே கல்வித்தகுதியில், காவலர் பணியில் சேர்ந்தோர், அலவன்ஸ் உடன், 13,000 வரை சம்பளம் பெறுகின்றனர். இதில், துப்புரவு பணியாளர்களுக்கு மட்டும் சிறப்பு கால ஊதிய முறைஏன் என, தெரியவில்லை. 3,000 ரூபாயில், குடும்பம் நடத்துவது எப்படி சாத்தியம். சிபாரிசுக்காக, வட்டிக்கு கடன் வாங்கி கொடுத்தவர்களும் உள்ளனர். அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தமிழக அரசு, சிறப்பு கால முறை ஊதியத்தில் இருந்து, கால முறை ஊதியத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment


web stats

web stats