Sunday, 15 September 2013

தாய்மொழியில் படிக்கிறார்கள், தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! சு.வீரமணி (புதிய தலைமுறை பயிற்சிப் பத்திரிக்கையாளர்)

                            

மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கி வரும் திருவள்ளுவர்  தமிழ் உயர்நிலைப்பள்ளியில்  கடந்த பத்து ஆண்டுகளாக  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்  100 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்

குடிசைப்பகுதி மாணவர்களுக்கு அரசின் உதவி இல்லாமலேயே இலவசமாகக் கல்வி, மதிய உணவு, இதர பயிற்சிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது காரைக்காலில் இயங்கி வரும் திருவள்ளுவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி.

22 பேருடன் தொடங்கிய இந்தப் பள்ளியில் இப்போது  250 மாணவர்கள் படித்து வருகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும்  100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள்.


ஆங்கிலம்தான் அறிவு என்றும் தமிழ்வழிக் கல்வியால் எதையும் சாதிக்க முடியாது என்றும் இன்றைய சமூகத்தை மயக்கி வைத்திருக்கும் மாயத்திரையை விலக்கி, தாய்மொழிக்கல்வி வெறும் கல்வியை மட்டும் கற்றுத் தருவதில்லை; அது அறநெறியில் தொடங்கி, அறிவியல் வரை அனைத்தையும் கற்றுத் தருகிறது என்பதை அப்பட்டமாக உலகிற்கு நிரூபித்து, தலைநிமிர்ந்து தமிழ் சமூகத்துக்கு தன்னம்பிக்கையைத் தருகிறது இந்த தமிழ்ப்பள்ளி.

இன்றைய சூழலில் மாணவர்களுக்கு புத்தக அறிவை   விடவும் நீதிபோதனைகளும், வாழ்வை எதிர்கொள்ளும் விதம் பற்றியுமே அதிகம் சொல்லித்தர வேண்டியிருக்கிறது. இதனை தன் லட்சியமாகக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, காரைக்காலில் இயங்கிவரும் திருவள்ளுவர் தமிழ் உயர்நிலைப் பள்ளி.

தரமான மாணவர்கள் உருவாக வேண்டுமெனில்  அது தாய்மொழிக் கல்வியால் மட்டும்தான் முடியும் என்கிற நோக்கத்துடன் 1995-ஆம் ஆண்டு பேராசிரியர் மருதமுத்து அவர்களால், 22 குழந்தைகளுடன் தொடங்கப்பட்டதுதான் இந்தப் பள்ளி. பொதுவாக எங்கள் பகுதி குடிசைகள் நிறைந்த, படிப்பறிவில்லாத பின்தங்கிய மக்கள் வாழும் பகுதி. வசதி வாய்ப்பற்ற இந்தப் பகுதி மக்கள் தங்கள் குழந்தைகளை சரியாகப் படிக்க வைக்காததால் அவர்கள் வளர்ந்தபிறகு பல்வேறுவிதமான சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு, அவர்களின்  வாழ்க்கையே பாழாகிப்போவதை நானே கண்கூடாகப்  பார்த்திருக்கிறேன். இவர்களுக்கு வெறும் கல்வியை மட்டும் புகுத்தினால் போதாது. அதனுடன் இணைத்து அறநெறி மற்றும் நல்லொழுக்கத்தையும் இணைத்து புகுத்தினால்தான் அவர்கள் வாழ்வு மேம்படும் என்பதால் அவர்களுக்கு அவற்றையும் இணைத்துப் புகுத்தினோம்" என்கிறார், இந்தப் பள்ளியின் தாளாளர் முத்துகிருட்டிணன்.

பேராசிரியர் மருதமுத்துவிற்குப் பிறகு 2000-ஆம் ஆண்டு முதல் இப்பள்ளியை இவர்தான் நிர்வகித்து வருகிறார்.  பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டபோதெல்லாம், இவரது மனைவியும், மருத்துவருமான உமா மகேஸ்வரியின் உதவியால் சமாளித்திருக்கிறார். பள்ளியை நிர்வகிப்பதற்காக தனது வழக்கறிஞர் பணியையும் துறந்துவிட்டு முழு நேரத்தையும் பள்ளிக்காகவே அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் இவர்.

திருவள்ளுவர் அறநெறிக் கல்விப் பணி அறக்கட்டளையை ஆரம்பித்து, தன்னார்வலர்கள் மற்றும் ரோட்டரி கிளப் போன்றவற்றின் உதவியுடன் இந்தப் பள்ளியை இப்போது சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். சிறப்பான நூலகத்தை அமைத்துள்ளோம். மாணவர்கள் தினமும் நூலகத்தில் வந்து புத்தகம் வாசிப்பதை கட்டாயமாக்கி இருக்கிறோம். தன்னார்வலர்கள் மற்றும் எக்ஸ்போ பிரைட் உதவியுடன் மாணவர்களுக்கு இலவச மதிய உணவு மற்றும் மாலை உணவு வழங்கி வருகிறோம். வெறும் கல்வியுடன் நின்றுவிடாமல், நீதி போதனை வகுப்புகளும், மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான கரகம், சிலம்பம், காவடி போன்ற கலைகளையும் கற்றுத் தருகிறோம். இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, எங்கள் பள்ளியில் உள்ள தோட்டத்திலேயே இயற்கையான முறையில் காய்கறிகளை விளைவித்து அதனையே மாணவர்கள் உண்கிறார்கள்" என்கிறார், முத்துகிருட்டிணன் பெருமையுடன்.

இப்பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் தமிழில் உரையாடுவதையே ஊக்குவிக்கும் அதே நேரத்தில் ஆங்கிலத்தின் அவசியத்தையும் புறக்கணிக்காமல் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஆங்கில வகுப்புகள் எடுத்து மாணவர்களின் ஆங்கிலத் திறனையும் வளர்த்து வருகிறார்கள். மாலை நேரத்தில் விளையாட்டு என்பது மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.     

கல்வியுடன் இணைத்து மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு, கையெழுத்துப் பயிற்சி, உடல்கல்வி, மருத்துவ முகாம்கள், திறன் மேம்பாட்டுப் பயிற்சி போன்றவற்றை மாணவர்களின் பங்களிப்புடன் செய்து வருகிறோம். தமிழ்வழிக் கல்வியின் மூலம் எதையும் சாதித்துவிட முடியாது எனப் பலரும் இப்போது கூறிவருகின்றனர். நமது பிள்ளைகளை காசு சம்பாதிக்கும் இயந்திரமாக உருவாக்க ஆசைப்படுகிறோம். அதுதான் இன்றைய சமூகத்தின் அவல நிலைக்குக்  காரணம். உண்மையில் நமது பிள்ளைகளை நாம் நல்ல மனிதர்களாக வளர்க்க வேண்டும். அது தாமொழிக் கல்வியால் மட்டுமே  சாத்தியமாகும்.

ஆங்கிலத்தின் அவசியத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை.  ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் பின்தங்கியிருக்கும் மாணவர்களை முன்னேற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான்  ஸ்கைப் (skype) மூலமாக தமிழகத்தின் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு பாடம் எடுக்க முடிவு செய்தோம். லோக்கலெக்ஸ் நிறுவனர் இராஜாராம் மற்றும் அனு அவர்களின் உதவியுடன் தமிழகத்தின் தலைசிறந்த ஆசிரியர்களை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு தினமும் ஆங்கிலம் மற்றும் கணித வகுப்புகளை எடுத்து வருகிறோம். ஸ்கைப்  மூலம் பாடம் எடுக்க ஆரம்பித்தபிறகு மாணவர்களின் கல்வித்திறன் வளர்ந்திருக்கிறது" என்கிறார், டாக்டர். உமா மகேஸ்வரி.

ஸ்கைப் மூலம் பாடம் எடுக்க ஆரம்பித்தபிறகு எங்களால் இப்போது ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களை எளிதாகப் புரிந்துக்கொள்ள முடிகிறது. தினமும் மதியம் ஒரு மணி நேரம் ஸ்கைப் மூலம் ஆசிரியர்கள் எங்களுக்குப் பாடங்களை எடுக்கிறார்கள். ஸ்கைப் மூலமே எங்களுக்கு அவ்வப்போது தேர்வுகளும் நடத்தப்படுவதால் முன்னைவிட இப்போது கணிதம், ஆங்கிலம், பொதுஅறிவு ஆகியவற்றை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது" என்கிறார், இங்கு படிக்கும் மாணவி விஷ்ணுப்ரியா.

வாரம் ஒருமுறை எங்கள் பள்ளியிலேயே தலைவர்கள் பற்றிய திரைப்படம் ஒன்றைத் திரையிடுகிறார்கள். வாரம் முழுவதும் ஒரு தலைவரைப்பற்றித் தெரிந்துகொள்ளச் சொல்லி வார இறுதியில் அவர்களைப்பற்றி பேச்சு, கட்டுரைப் போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்குகிறார்கள். இதன் மூலம் எங்களுடைய பொது அறிவு வளர்கிறது. விளையாட்டு மற்றும் கலைகளில் ஆர்வம் காட்ட  பள்ளியே ஊக்கப்படுத்துவதால் எங்களுக்கு பாடப் புத்தகத்தை தாண்டி இன்னொரு உலகம் இருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது" என்கிறார், மாணவர்  வினோத்.

நான் இந்தப் பள்ளியில் 10-ஆம் வகுப்புவரை தமிழ்வழியில்தான் படித்தேன். அப்போதே எங்களுக்கு கல்வியைத் தவிர்த்து வாழ்க்கைக் கல்வியையும் இந்தப் பள்ளி உணர்த்தியது. 12-ஆம் வகுப்புத் தேர்வில் காரைக்கால் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பெற்று இப்போது புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் வழியில் ஆரம்பக்கல்வியைப் படித்ததால் என்னால் இப்போது மருத்துவக் கல்வியையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடிகிறது" என்கிறார், முன்னாள் மாணவி வெண்மணி.

நானும் 10-ஆம் வகுப்புவரை இந்தப் பள்ளியில் தமிழ் வழியில்தான் படித்தேன். என்னைப் போன்ற, பொருளாதார ரீதியாகப் பின் தங்கியுள்ள மாணவர்களின்மேல் தனிக்கவனம் செலுத்திப் படிக்க வைக்கிறார்கள். நான் இப்போது டிப்ளமோ என்ஜினீயரிங்  படித்துக் கொண்டிருக்கிறேன். தாய்மொழிக் கல்வி எங்களுக்கு வாழ்வை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை தந்திருக்கிறது" என்கிறார், முன்னாள் மாணவர் லூகாஸ்.

தாய்மொழியில் படித்த எந்த மாணவனும் பின்தங்கவில்லை என்பதற்கு சாட்சியாக விளங்குகிறது இந்தத் தமிழ்ப் பள்ளி.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats