Saturday, 21 September 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படியை உயர்த்த மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து, தற்போது 80 சதவீதமாக வழங்கப்படும் அகவிலைப்படி கடந்த ஜூலை 1-ஆம் தேதி கணக்கிட்டு 90 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான தொகையை கடந்த ஜூலை 1-ஆம் தேதி கணக்கிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வழங்கவும் மத்திய அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பலன் பெறுவர். இதனால், மத்திய அரசுக்கு 2013-14 நிதியாண்டில் ரூ. 18,133 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்ட மற்ற அம்சங்கள் வருமாறு:
பருப்பு, சமையல் எண்ணெய் கையிருப்பு: பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சமையல் எண்ணெய் விதைகளை மாநில அரசுகள் கையிருப்பில் வைத்திருக்கும் வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த ஆணை இம் மாத இறுதியுடன் நிறைவு பெறுகிறது. அதை அடுத்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
மழலையர் பராமரிப்பு, கல்விக் கொள்கை: மழலையர் பராமரிப்பு, கல்விக் கொள்கையை குழு அமைத்து தேசிய மாநில அளவில் கண்காணிக்கவும், இதற்கான பாடத்திட்ட நெறிகள், செயல் திட்டத்தை வகுக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இந்க் கொள்கையில் தேவைப்படும் திருத்தங்களை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் மழலையர் பள்ளிகளை ஒழுங்குமுறைப்படுத்த இக் கொள்கை வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய உணவுப் பாதுகாப்பு அமலாக்கம்: மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தை 12-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் செயல்படுத்த ரூ. 12,350 கோடி நிதி ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் 2016-17 நிதியாண்டில் ஒரு கோடி டன் அரிசி, 80 லட்சம் டன் கோதுமை, 40 லட்சம் டன் பருப்பு வகைகள், 30 லட்சம் டன் தானியங்களை உற்பத்தி செய்ய முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் ஐ.டி. மண்டலம்: ஹைதராபாதில் தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டலத்தை ரூ.2.19 லட்சம் கோடியில் அமைக்கவும் ரேடியல் சாலைகள், மெட்ரோ ரயில் சேவைகளை ஃபலக்நாமா முதல் ஷாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையம் வரை ரூ. 3,275 கோடி மதிப்பில் உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats