Thursday, 19 September 2013

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு துறைகளில் புதிய நியமனங்களுக்கு தடை

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசு, அதிரடி சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அரசுத் துறையில், புதிய நியமனங்களுக்கு தடை, திட்டமில்லா செலவுகள், 10 சதவீதம் குறைப்பு உள்ளிட்ட, சிக்கன நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளால், இந்திய பொருளாதாரம், தள்ளாடத் துவங்கியுள்ளது. "பொருளாதார நிலைமை, விரைவில் சரியாகி விடும்; ரூபாய் மதிப்பு உயரும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன' என, இதுவரை பேசி வந்த மத்திய அரசு, கடுமையான நிதிப் பற்றாக்குறையால், தற்போது, விழி பிதுங்கி போயுள்ளது.பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக, அதிரடியாக, சில சிக்கன நடவடிக்கைகளை, மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும், நிதி அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக, அரசின் செயல்பாடுகளுக்கு பாதகம் இல்லாத, சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. கையில் உள்ள நிதி ஆதாரத்தை வைத்து, செலவினங்களை ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதன்படி, திட்டமில்லா செலவினங்களில், 10 சதவீதம் குறைக்கப்படும். மத்திய அரசின் அனைத்து துறைகளிலும், புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கப்படுவதோடு, அரசுத் துறைகளுக்கு, புதிய வாகனங்கள் வாங்குவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.அரசின் முக்கியமான கருத்தரங்குகளை, ஐந்து நட்சத்திர விடுதிகளில் நடத்தக் கூடாது. உயரதிகாரிகளைத் தவிர, மற்ற அதிகாரிகள், உள்நாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் போது, விமானங்களில், சாதாரண வகுப்புகளில் தான், பயணிக்க வேண்டும்.இவ்வாறு, அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats