காஞ்சீபுரம் மாவட்டம் கீழ்மருவத்தூரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர் கண்ணன் கோவிந்தராஜ் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:–
இந்தியா மதசார்பற்ற நாடு. மத ரீதியான சின்னங்களை அரசின் அடையாளமாக வைத்துச் கொள்ளக் கூடாது. ஆனால் தமிழக அரசின் லட்சினை (முத்திரை)யில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் இடம் பெற்றுள்ளது. கோபுரத்தின் கீழே தேசிய கொடி 2 ஆக பிளவுபடுத்தப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.
மதசார்பற்ற நாட்டில் இதுபோல மதத்தின் சின்னத்தை அரசின் முத்திரையாக வைப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தமிழக அரசு முத்திரையில் ஆண்டாள் கோவில் கோபுரத்தை அகற்றவும், நிர்ணயிக்கப்பட்ட அளவில் தேசிய கொடியை முத்திரையில் இடம் பெற செய்யவும் அரசுக்கு உத்தர விட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவுக்கு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘பெண்மையை போற்றும் விதமாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் அரசு முத்திரையில் இடம்பெற செய்யப்பட்டுள்ளது. தேசிய கொடியும் சரியான அளவில் அமைக்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் பொது நல மனுவை தள்ளுபடி செய்தனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் ஏராளமான இந்து கோவில்கள் உள்ளன. அந்த பழமையான கோவில் கோபுரங்கள் கலாச்சார சின்னமாகத்தான் பார்க்கப்படுகிறது என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கோவில் கோபுரம் அரசு சின்னத்தில் இடம் பெற்றாலும் மதசார்பற்ற முறைக்கு எதிராக அரசு செயல்பட்டது என்று இதுவரை எந்த குற்றச்சாட்டும் எழவில்லை. அரசு முத்திரையில் தேசிய கொடியின் அளவும் சரியாகத்தான் உள்ளது. எனவே பொதுநல மனுவை தள்ளுபடி செய்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியிருந்தனர்.
No comments:
Post a Comment