Sunday, 15 September 2013

இவரும் ஆசிரியர் தான்!

பழைய காகிதம், பாட்டில்கள், தீக்குச்சி...  இப்படி நம்மால் தூக்கி எறியப்படும் பொருள்களிலிருந்து குழந்தைகளுக்கான அறிவியல் விளையாட்டுப் பொருள்களை உருவாக்கி, அதனை பள்ளிக் குழந்தைகளி டம் பிரபலப்படுத்தி வருகிறார் கான்பூர் ஐஐடி  முன்னாள் மாணவர் அரவிந்த் குப்தா


ஒரு நாள் புத்தர் மடாலயத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.


‘எனக்கு புதிய போர்வை வேண்டும்’ என்றார் அங்கு இருந்த சீடர் ஒருவர்.

‘உனது பழைய போர்வை என்ன ஆனது?’ என்று கேட்டார் புத்தர்

‘அது பழையதாகி நைந்து போய் விட்டது. அதனால் அதனை தற்போது பெட்ஷிட்டாகப் பயன்படுத்துகிறேன்’ என்றார் சீடர்.

புத்தர் மீண்டும் கேட்டார். ‘உனது பழைய பெட்ஷீட் என்ன ஆனது?’

‘ பெட்ஷீட் பழையதாகி விட்டதால் நைந்து கிழிந்து போய் விட்டது. எனவே அதை வெட்டி தலையணை உறையாகப் பயன்படுத்தி வருகிறேன்’ இது சீடரின் பதில்.

‘அப்படியானால் ஏற்கெனவே இருந்த தலையணை உறையை வைத்து என்ன செய்தாய்?’ என்று விடாமல் தொடர்ந்தார் புத்தர்.

‘பழைய தலையணை உறையில் நீண்ட காலம் படுத்து உறங்கியதால் அதில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. எனவே அதை தரைமிதியாகப் பயன்படுத்துகிறேன்’என்று தொடர்ந்து பதிலளித்தார் சீடர்.

இதிலும் புத்தர் திருப்தி அடையவில்லை. தொடந்து கேள்வி எழுப்பினார்: ‘பழைய தரைமிதி இருந்திருக்கிருக்குமே...அதை என்ன செய்தாய் என்று சொல்லு’

சீடர் கையைக் கட்டிக் கொண்டு பணிவுடன் பதில் சொன்னார்: ‘பழைய தரைமிதி முழுவதுமாகப் பயன்படுத்த முடியாதபடி சேதமாகி விட்டது. தொடர்ந்து பயன்படுத்தியதால் அது நூல் நூலாகி விட்டது. அந்த நூல்களைச் சேர்த்து எடுத்து முறுக்கி விளக்குத் திரியாகப் பயன்படுத்தினேன்.’

அதைக் கேட்டு சிரித்துக் கொண்டே, சீடருக்கு புதிய போர்வையைக் கொடுக்க ஏற்பாடு செய்தார் புத்தர்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது. ‘மறுசுழற்சி செய். பயன்படுத்து. வீணாக்காதே’ என்று இது நமக்கு பாடம் கற்பிக்கிறது என்கிறார் அரவிந்த் குப்தா. இப்படி கதைகளைச் சொல்லுவதுடன் அவர் நின்றுவிடுதில்லை. கையில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு குழந்தைகளிடம் அறிவியல் விளையாட்டுப் பொருள்களை உருவாக்கிக் காட்டி அவர்களுக்கு கற்றலில் இனிமையூட்டி வருகிறார். கான்பூர் ஐஐடியில் எலெக்ட்ரிக் என்ஜினீயரிங் படித்த அவர், நல்ல நிறுவனங்களில் நல்ல வேலையில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம் என்ற போதிலும்கூட, குழந்தைகளுக்கு அறிவியல் விளையாட்டுகளைக் கற்றுத் தரும் பணியில் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். ‘எனது பெற்றோர் பள்ளிக்குச் சென்றதில்லை. ஆனாலும், எங்களை நன்றாகப் படிக்க வைத்தனர்‘ என்பதை நினைவு கூரும் அரவிந்த் குப்தா, ‘எனக்கு நன்கு படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது. அதனை சமூக முன்னேற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது விருப்பம்‘ என்கிறார்.

1970-களில் கான்பூர் ஐஐடியில் படிப்பை முடித்த அவர், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இடையில் ஓராண்டு படிப்பதற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு மத்தியப் பிரதேசம் சென்றார். அங்கு குழந்தைகளுக்கு அறிவியலைக் கற்றுத் தருவது குறித்த திட்டத்தில் பங்கேற்றார். அது அவரது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. குழந்தைகளுக்கு அறிவியலைக் கற்றுத் தர, எளிய விளையாட்டுப் பொருள்களை உருவாக்க நினைத்தார். கிராமங்களில் உள்ள பல பள்ளிகளில் அறிவியல் சோதனைகளை மாணவர்களுக்கு செய்துகாட்ட உபகரணங்கள் இருக்காது. சாதாரணமாக உள்ளூர்களில் கிடைக்கும் பொருள்களிலிருந்தே சிறிய சோதனைகளை செய்ய முடியும். அதற்குத் தேவை கொஞ்சம் அறிவு. முயற்சி. அவை நிறையவே அரவிந்த் குப்தாவிடம் இருந்தன. பழைய செய்தித்தாள்கள், பாட்டில்கள், சைக்கிள் டியூப், ஃபிலிம் ரோல்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பென்சில், பேட்டரி, மேக்னெட், தீக்குச்சிகள், வீணாகிப் போன காலணி, துடைப்பம், நூல், ரீபில், டாரா, குண்டூசி, கோந்து... இப்படி நம்மிடம் உள்ள பொருள்களைக் கொண்டு பல அறிவியல் விளையாட்டுப் பொருள்களை குழந்தைகளிடம் உருவாக்கிக் காட்டினார். அவர்களையும் உருவாக்கச் சொன்னார். செய்முறை சோதனைகள் மூலம் அறிவியலை எளிதாகப் புரிந்துகொள்ள வைத்தார் அவர். வீண் என்று நாம் தூக்கி எறியும் பொருள்களிலிருந்து குழந்தைகளுக்கான அறிவியல் விளையாட்டுப் பொருள்களை உருவாக்கி அதனை பள்ளிக் குழந்தைகளிடம் பிரபலப்படுத்துவதே அவரது முழு நேரப் பணியாக ஆகி விட்டது. இவரது எளிய மனித நேய அணுகுமுறை, இவரை குழந்தைகளிடம் பிரபலமாக்கியுள்ளது. கிராமத்துப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இவரது உபகரணங்கள் ஓர் அரிய வரப்பிரசாதம்.

இவரை நேரடியாக அறியாதவர்கள்கூட, இவரது அறிவியல் விளையாட்டுப் பொருள்களைப் பார்த்தால், அவரது ரசிகர்களாக மாறிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை. தற்போது, புனேயில் உள்ள இன்டர் யுனிவர்சிட்டி சென்டர் ஃபார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோ பிசிக்ஸ் அமைப்பின் குழந்தைகள் அறிவியல் மையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இதுவரை அவர் உருவாக்கியுள்ள நூற்றுக்கணக்கான அறிவியல் விளையாட்டுப் பொருள்கள் குறித்த விவரங்கள் அவரது இணையதளத்தில் ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் உள்ளன. தமிழிலும் உள்ளது. அந்த வீடியோவைப் பார்த்து, விளையாட்டுப் பொருள்களை எளிதாக நாமே செய்து விடலாம். அதற்கு செலவும் ஆகாது. ஏனெனில் அனைத்தும் நமது வீட்டில் வீணாகக் கிடைக்கும் பொருள்களிலிருந்தே செய்துவிட முடியும். ஒவ்வொரு விளையாட்டிலும் ஓர் அறிவியல் கோட்பாடு இருக்கிறது. இந்த விளையாட்டுப் பொருளை உருவாக்கி விளையாடுவதன் மூலம் குழந்தைகளே அந்த அறிவியல் கோட்பாடுகளை எளிதாகப் புரிந்து கொள்வார்கள். இவர் உருவாக்கியுள்ள நூற்றுக்கணக்கான விளையாட்டுப் பொருள்களுக்கு எந்தக் காப்புரிமையும் கிடையாது. எனவே, யாரும் பயன்படுத்தலாம். இவரது இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து, குழந்தைகளுக்குக் கற்றுத் தரலாம். எப்படியும் பள்ளிக் குழந்தைகளுக்கு இதன் பயன் பரவலாகக் கிடைக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். அறிவியல் விளையாட்டுப் பொருள்களை உருவாக்குவது குறித்து இவர் எழுதிய புத்தகங்கள் பல மொழிகளில் வெளியாகியுள்ளன. கல்வி தொடர்பான பல புத்தகங்களை மொழி பெயர்த்து இருக்கிறார். இவரது வீடியோக்களை நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் ஆசிரியர்களும் பார்க்கிறார்கள்.

குழந்தைகளிடம் அறிவியலை பிரபலப்படுத்தியதற்காக 1988-ஆம் ஆண்டில் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. 2001-ஆம் ஆண்டில் ஐஐடியின் சிறந்த முன்னாள் மாணவர் விருது வழங்கப்பட்டது. 2008-ஆம் ஆண்டில் அறிவியலை பிரபலப்படுத்தியதற்காக இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகாதெமியின் இந்திரா காந்தி விருது கிடைத்தது. பரிசுகளுக்கும் பாராட்டுகளுக்கும் அப்பாற்பட்டு, குழந்தைகளிடம் அறிவியலை வளர்க்கும் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் அரவிந்த் குப்தா. அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல். அதற்கு எந்த வகையிலும் குறைவில்லாதது குழந்தைகளிடம் அறிவியலைப் பரப்பும் அரவிந்த் குப்தாவின் சேவையும்.

விவரங்களுக்கு: www.aravindguptatoys.com

பொன்.தனசேகரன்

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats