தனியார் பள்ளிகளால் புறக்கணிக்கப்பட்ட பையன் மீண்டுவந்ததற்கு அரசுப் பள்ளியும் அதன் ஆசிரியர்களும் ஆற்றிய பங்கு என்ன? ஒன்றுமேயில்லையா? இப்போதைக்கு முந்தைய தலைமுறைவரை பெரும்பாலோர் அரசுப் பள்ளிகளில் படித்து வந்தவர்கள்தான். அவர்கள் திறமைசாலிகளாக, ஆற்றலாளர்களாக வெளிப்படவில்லையா? அரசுப் பள்ளிகள் குறையுடையவைதாம்; அங்குப் பணியாற்றும் ஆசிரியர்களும் புனித ஆத்மாக்கள் அல்ல. ஆனால் தனியார் பள்ளிகள் சுமத்தும் நிர்ப்பந்தங்கள் கிடையாது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோருக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். பெற்றோருக்கும் கேள்வி கேட்கும் உரிமை ஓரளவுக்கேனும் அங்கே இருக்கிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் நிர்வாகம் சொல்வதை மறுப்பேதும் இல்லாமல் பெற்றோர் அப்படியே கேட்டுக்கொள்ள வேண்டும். திட்டுகளை வாங்கிக்கொள்ள வேண்டும்
. குழந்தை படிக்கவில்லை என்றால் அதற்குக் காரணம் பெற்றோர்தான் என்று கூசாமல் சொல்வார்கள். கேட்டுக்கொள்ளத்தான் வேண்டும். வேறென்ன செய்ய? இப்படி எல்லாம் இருந்தும் அரசுப் பள்ளிகளைப் பற்றிய இளக்காரமும் ஏளனமும் ஏன்? அரசுப் பள்ளிகள் அருமையானவை என்பதல்ல. ஒப்பீட்டளவில் குழந்தைகளின் உணர்வுகள் இயல்பான மலர்ச்சியைப் பெற அரசுப் பள்ளிகள்தாம் இன்று உதவக்கூடியவை. ஒரு குழந்தையை ஆசிரியர் அடித்துவிட்டால் பெற்றோர் திரண்டு போய்ப் போராட்டம் நடத்துகிறார்கள். தனியார் பள்ளியில் அப்படி நடக்குமா? ஏதாவது ஒரு குழந்தை கொலைசெய்யப்பட்டுவிட்டால்தான் குறைந்தபட்ச உணர்ச்சி வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தனியார் பள்ளிகளில் படிக்கும் பத்து வயதிலிருந்து பதினேழு வயதிற்குட்பட்ட பதின்பருவப் பிள்ளைகள் எத்தனையோ பேர் மனநெருக்கடிக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவையெல்லாம் ஊடகங்களில் வருவதேயில்லை. பள்ளி நிர்வாகம் தரும் விளம்பரத்திற்குப் பாதகம் என்று ஊடகங்கள் அவற்றை மறைத்துவிடுகின்றன. ஆனால் அரசுப் பள்ளியில் ஒரு மாணவனுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஊடகங்கள் பொங்குகின்றன. முதல் இலக்கு ஆசிரியர்கள்தான். ஆனால் அரசுப் பள்ளி என்றாலே பெரும் பத்திரிகை முதற்கொண்டு பல எழுத்தாளர்களுக்கும் பொதுப்புத்தி சார்ந்த அபிப்ராயம்தான். எப்போதுமே பொதுப்புத்தி சார்ந்த கருத்துகளை வலுப்படுத்துவதில் ஊடகங்களுக்குப் பெரும் பங்குண்டு. அவற்றினாலேயே ஊடகங்கள் ஜீவிக்கின்றன. பொதுப்புத்திக்கு இணங்கிப்போகும் ஊடகங்களுக்கு வாசகர், பார்வையாளர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பது நியதி. அந்த எண்ணிக்கையை விளம்பரம், அரசியல் உள்ளிட்ட சுயலாபங்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளும் திறனும் அவற்றிற்கு உண்டு. அத்தகைய கருத்தின் பொய்ம்மை உடைபட ஊடகங்கள் விரும்புவதில்லை. ஆகவே நுட்பங்கள் நோக்கிய பார்வையை அவை புறக்கணிக்கின்றன. பொதுத்துறைகளில் தனியார் ஆதிக்கம் பெருமளவுக்கு ஏற்பட்டு அதன் விளைவுகளைச் சந்தித்துக்கொண்டிருக்கும் காலம் இது. அரசு நிறுவனங்கள்மீதான அவ நம்பிக்கைகளை முன்னிறுத்தி, எல்லாம் தனியார் மயமாக வேண்டும் என்று கிளிப்பிள்ளைகள்போல் சொல்லிக் கொண்டிருப்பதால் பயனொன்றும் இல்லை. அரசுசார் நிறுவனங்களின் குறைகளைக் களைவதற்குக் குரல் எழுப்ப வேண்டுமே தவிர அவற்றை அழிப்பதற்கல்ல.(கண்காணிப்பும் சுதந்திரமும் கட்டுரையில்)
No comments:
Post a Comment