கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிவித்த வேட்டி தினத்திற்கு அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்கு 1 லட்சம் வேட்டிகள் விற்பனையாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கோ - ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் ஜனவரி 1ம் தேதியில் இருந்து பொங்கல் வரை ஏதேனும் ஒரு நாளை வேட்டி தினமாக அறிவிக்க வேண்டும். அன்று அனைத்து ஊழியர்களும், வேட்டி அணிந்து வர வேண்டும். தேவையான வேட்டிகளை கோ - ஆப்டெக்சில் வாங்க வேண்டும்" என, வேண்டுகோள் விடுத்து அனைத்து மாவட்ட கலெக்டர், கல்லூரி, பல்கலைக்கழகம், அரசு துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். இக்கடிதத்திற்கு, அனைத்து தரப்பிலும், வரவேற்பு கிடைத்துள்ளது.
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் "வேட்டி தினம்" அறிவிக்கப்பட்டு அனைத்து ஊழியர்களும் வேட்டி அணிந்து வந்து புதுமை படைத்தனர். நேற்று முன்தினம் கோ - ஆப்டெக்ஸ் ஊழியர்கள் அனைவரும் வேட்டி அணிந்து வந்தனர். சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 10ம் தேதி; மதுரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 13ம் தேதி, வேட்டி அணிந்து வர உள்ளனர்.
அதேபோல், பல்வேறு பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் "வேட்டி தினம்" கொண்டாட முடிவு செய்து கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வேட்டி வழங்கும்படி கடிதம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து, சகாயம் கூறியதாவது: "அனைத்து தரப்பு மக்களிடமும் வேட்டி தினத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், இம்மாதம் இதுவரை 25 ஆயிரம் வேட்டிகள் கூடுதலாக விற்கப்பட்டுள்ளன. பொங்கல் பண்டிகைக்கு வழக்கமாக 40 ஆயிரம் வேட்டிகள் விற்பனையாகும். இம்முறை 1 லட்சம் வேட்டிகள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது." இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment