5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Monday, 6 January 2014

ஏப்ரலில் மக்களவைத் தேர்தல்: தேர்தல் ஆணையம் திட்டம்

மக்களவைத் தேர்தலை ஏப்ரல் மாதம் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலோ வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அதாவது மக்களவைத் தேர்தலை ஏப்ரல் மாதம் நடுவில் தொடங்கி மே மாதம் முதல் வாரத்துக்குள் ஐந்து கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மக்களûவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலம், ஒடிஸா மற்றும் சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னதாக மக்களவை கடைசியாக ஒரு முறை கூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் 2014-ம் ஆண்டின் முதல் ஆறுமாத காலங்களுக்கான பட்ஜெட் செலவினங்களுக்காக ஒப்புதல் பெறப்படும். அதன் பின்னர் தேர்தல் நடந்து முடிந்து புதிய அரசு பதவியேற்றதும் முழு அளவிலான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
தற்போதைய மக்களவையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 1-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மே மாதம் 31-ஆம் தேதிக்குள் புதிய அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும். மக்களவைத் தேர்தலை ஐந்து அல்லது ஆறு கட்டங்களாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த தேர்தலில் சுமார் 80 கோடி பேர் வாக்களிக்க தகுதிபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவதற்கு 1.1 கோடி பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களில் பாதி பேர் பாதுகாப்புப் படையினராவர்.
நாடு முழுவதும் தேர்தலை நடத்துவதற்கு 8 லட்சம் வாக்குச்சாவடிகள் தேவைப்படுகிறது. தற்போது தேர்தல் ஆணையத்திடம் சுமார் 12 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளன. வருகிற பிப்ரவரி மாதத்துக்குள் மேலும் புதிதாக ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் வாக்குப் பதிவு இயந்திரங்களும் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தல், 2009-ஆம் ஆண்டில் ஏப்ரல் 16-ஆம் தேதி தொடங்கி மே 13-ஆம் தேதி வரை ஐந்து கட்டமாக நடைபெற்றது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. மே 16-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
1971-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதன் பிறது இதுவரை வாக்குப்பதிவு பல கட்டமாகவே நடத்தப்பட்டு வந்தன.
வரும் மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரம், ஒடிஸா மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளன. தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு வேறு எந்த மாநிலத்திலிருந்தும் கோரிக்கைகள் வரவில்லை. எனினும் ஹரியாணா மாநிலம் மட்டும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு கேட்டுக்கொள்ளக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே ஆந்திர மாநிலத்தில் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் எனத் தெரிகிறது. ஆந்திரத்தில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இது தவிர ஒடிஸாவில் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், சிக்கிமில் 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. ஒடிஸா சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜூன் மாதம் 7-ஆம் தேதியும், சிக்கிம் மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 21-ஆம் தேதியும் முடிவடைகின்றன.

No comments:

Post a Comment


web stats

web stats