5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Thursday, 9 January 2014

அரசு பொதுத் தேர்வில் 95% தேர்ச்சி பெற இலக்கு: பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர்

""இந்தாண்டு அரசு பொதுத் தேர்வில், 95 சதவீத தேர்ச்சி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபீதா கூறினார்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 பயிலும் மாணவ, மாணவியர், அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற, "வெற்றி உங்கள் கையில்' என்ற வழிகாட்டி கையேடு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமை வகித்தார்.
மாநில பள்ளி கல்வித் துறை அமைச்சர் வீரமணி துவக்கி வைத்து பேசியதாவது:
நாட்டின் முன்னேற்றம் கல்வி வளர்ச்சியில் தான் உள்ளது. அடுத்த பத்தாண்டுக்குள் இந்தியாவில் கல்வி வளர்ச்சியில், தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில், அதிக நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறை செயல்படுத்தும் திட்டங்களை, முன் உதாரணமாகக் கொண்டு, இதர மாநிலங்கள் பின்பற்றுகின்றன. அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் சிறந்த, அனுபவமிக்க பாட ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
முந்தைய ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்வில் வினாத்தாள்களைக் கொண்டு, மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. எளிதான பாடப்பகுதிகளை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கி, மாணவர்கள் எவ்வித அச்சமும் இன்றி எளிதாக தேர்வு எழுத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் சபிதா பேசியதாவது:
கடந்த, 2011-12ம் ஆண்டில், 13, 300 கோடி ரூபாயும், 2012-13ம் ஆண்டில், 14, 552 கோடி ரூபாயும், இந்த நிதியாண்டில், 17,000 கோடி ரூபாயும் என, மூன்று ஆண்டுகளில், 45,000 கோடி ரூபாயை கல்வி துறைக்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
கடந்த, 2013ம் ஆண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்வில், 89 சதவீதமும், ப்ளஸ் 2 தேர்வில், 88.6 சதவீதமும் தேர்ச்சி சதவீதம் உள்ளது. 2014ம் ஆண்டில், 95 சதவீதம் தேர்ச்சி சதவீதம் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் காலிப்பணியிடத்தை நிரப்ப, 63,125 ஆசிரியர்களை புதிதாக நியமனம் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.
இதுவரை, 57,000 ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வில், 11.60 லட்சம் மாணவ, மாணவியரும், ப்ளஸ் 2 வகுப்பில், 8.81 லட்சம் மாணவ, மாணவியரும் என, 20 லட்சம் பேர் அரசு தேர்வு எழுத உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பள்ளி கல்வித் துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் வரவேற்றார். இணை இயக்குனர் பழனிச்சாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment


web stats

web stats