குழந்தை தொழிலாளர் நிலையைக் கட்டுப்படுத்த, பள்ளி மாணவர்களுக்கு, ஒரு லட்சம் கடிதங்கள் அனுப்பி, விருதுநகர் மாவட்ட கலெக்டர் புதிய முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க, பலகட்ட முயற்சிகள் நடந்தாலும், பல இடங்களில், குழந்தை தொழிலாளர் நிலை இன்னும் தொடர்கிறது. சிவகாசியில், பட்டாசு நிறுவனங்கள், தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும், குழந்தை தொழிலாளர் முறை நீடிக்கிறது.
அஞ்சல் வழியாக:இதை கட்டுப்படுத்த, விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன், புதிய முயற்சி மேற்கொண்டுள்ளார். தன் கைப்பட எழுதிய கடிதம் அச்சடிக்கப்பட்டு, ஒரு லட்சம் பள்ளி மாணவர்களுக்கு, அஞ்சல் வழியாக அனுப்பி வருகிறார்
.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். நீங்கள் வசிக்கும் ஊரில் உங்களைப் போல் பள்ளிக்கு போகாமல், கடை, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் குழந்தைகள் இருக்கின்றனர்.ஆடிப்பாடி மகிழ வேண்டிய வயதில், திருமணம் செய்து, குடும்ப பாரம் சுமக்கும் சூழலும் நிகழத்தான் செய்கிறது.அவர்களுக்கு, நான் புத்தாண்டு வாழ்த்துகளை கூற முடியாது. காரணம், அவர்களது வாழ்க்கை இனிமையாக இல்லாமல், கசப்பானதாக இருக்கும். நீ நினைத்தால், அவர்களின் வாழ்க்கையை இனிப்பாக்க முடியும். உன் தோழன், தோழி, குழந்தை தொழிலாளர் ஆவதையும், குழந்தை திருமணம் செய்வதையும் தடுக்க முடியும்.
தொடர்பு:
உன்னுடைய ஒரு தொலைபேசி உரையாடல், குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.,) போதும்; உன் நண்பனின் தலை எழுத்தை மாற்றலாம். என்னை (கலெக்டர்) - 94441 84000, ஆர்.டி.ஓ., - 94450 00444, தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட இயக்குனர் - 94430 11440 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இதுதவிர, 1098 என்ற கட்டணமில்லாத தொலைபேசியிலும் தகவல் தரலாம். தகவல் கொடுப்போர் விவரம் வெளிவராது. மீட்கப்படும் குழந்தைகளுக்கு கல்வி, விடுதி வசதி இலவசமாக தரப்படும். உன் வாழ்க்கை இனிதானது போல், உன் தோழன், தோழி வாழ்க்கையும் இனியதாக மாற்ற, நீ எனக்கு உதவ வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.இந்த கடிதத்துக்கு, மாணவர்கள், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபோன்று, பிற மாவட்டங்களிலும் முயற்சி மேற்கொண்டால், குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை வெகுவாக குறையும்.
No comments:
Post a Comment