5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Wednesday, 8 January 2014

புவியியல், வரைப்படம், நேரம் கணக்கீடு தொடர்பாக 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


புவியியல், வரைப்படம், நேரம் கணக்கீடு தொடர்பாக 35 லட்சம் மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் சமூகவியல் ஆசிரியர்களுக்கு ஜனவரி 20 முதல் 24-ஆம் தேதி வரை அந்தந்த வட்டார அளவில் பயிற்சி வழங்கப்படும் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ச.கண்ணப்பன் கூறினார்.

வட்டார அளவில் பயிற்சி வழங்குவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தலா 2 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு மாநில அளவிலான பயிற்சி சென்னையில் திங்கள் (ஜனவரி 6) மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் (ஜனவரி 7) வழங்கப்பட்டது.


மாணவர்களுக்கு புவியியல் குறித்த ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்காக கடந்த ஆண்டு 46 லட்சம் அட்லஸ் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்த ஆண்டு 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 9 லட்சம் அட்லஸ் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

இந்தப் புத்தகங்களைப் பயன்படுத்தவும், இதைப் பயன்படுத்தி மாணவர்களிடையே புவியியல் மற்றும் வரைப்பட ஆர்வத்தை வளர்க்கவும் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படுகிறது என கண்ணப்பன் தெரிவித்தார்.

இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 35 லட்சம் மாணவர்களுக்கு செயல்பாடுகளுடன் கூடிய புதிய முறையில் புவியியல் மற்றும் வரைபடம் கற்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த பயிற்சிக்காக "அறிவோம் அகிலத்தை' என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கையேட்டில் திசைகளைக் கற்பித்தல், வரைப்படத்தில் உள்ள அளவுகளை அறிமுகப்படுத்துதல், அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளின் பயன்பாட்டை மாணவர்களுக்கு விளக்குதல், நேரத்தைக் கணக்கிடுதல் உள்ளிட்டவை தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட செயல் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

புவி மாதிரி, வரைப்படம் (மேப்), அட்லஸ் புத்தகம் ஆகியவற்றை ஆய்வு செய்தல், புவியமைப்பில் உள்ள முக்கிய நிலத்தோற்றங்கள், அரசியல் மற்றும் இயற்கை உள்ளிட்ட பல்வேறு வகையான வரைப்படங்கள், வரைப்படங்களில் உள்ள குறியீடுகள் போன்றவை தொடர்பாகவும் மாணவர்களுக்கு புதிய முறையில் விளக்கும் செயல்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த பயிற்சிக்குப் பின்னர் ஒவ்வொரு மாணவரும் தங்களது இருப்பிடத்துக்கும், வெளிநாடுகளுக்கும் உள்ள நேர வித்தியாசத்தை தாங்களே கணக்கிடும் திறனைப் பெறுவர். வரைப்பட அளவைகளும் அவர்களுக்குக் கற்றுத்தரப்படுவதால், வரைபடங்களில் உள்ள தூரங்களைக் கொண்டு ஊர்களுக்கு இடையேயான தூரத்தையும் அவர்கள் கணக்கிடலாம் என்று ஆசிரியர் பயிற்சியாளர்களும், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் விரிவுரையாளர்களுமான என்.மகாலட்சுமி, டி.அகிலா ஆகியோர் தெரிவித்தனர்.

வரைப்படங்கள், நிலத்தோற்றங்கள், நாடுகள் மற்றும் நேரக் கணக்கீடு, அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை, குறியீடுகள் ஆகியவைத் தொடர்பாக போட்டித் தேர்வுகளில் அதிகம் கேட்கப்படுகின்றன.

எனவே இத்தகைய அடிப்படைகளை மாணவர்கள் கற்றுக்கொண்டால் இந்தத் தேர்வுகளிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர் (பயிற்சி) எஸ்.உமா கூறினார்

No comments:

Post a Comment


web stats

web stats