பள்ளி கல்வி துறையிலுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீத இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு நேற்று மதுரையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
"தொடக்க கல்வி துறையில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மூலமாக பள்ளிக்கல்வித்துறையில் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனறர். அதேபோல, பள்ளி கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 3 கல்வி மாவட்டங்களிலும் பள்ளி உதவியாளர் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் சீரான தேர்ச்சி விகிதம் உள்ளது. எனவே, அங்கு வேலைபார்க்கும் சுமார் 150 பட்டதாரி ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் பணியிட மாறுதல் செய்து உத்தரவிடவேண்டும்.
எஸ்.எஸ்.எல்.சி. ,மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் கொண்டு வரப்படும் மாற்றங்களை இந்த செயற்குழு வரவேற்கிறது. அதே சமயத்தில் மாணவர்களின் நலன் கருதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடர வேண்டும்."
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment