5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்

Saturday, 4 January 2014

அரசு பள்ளிகளில் 100 % மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் பள்ளி கல்வி முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்


வரும்கல்வியாண்டில்அரசு பள்ளிகளில் நூறு சதவீத மாணவர் சேர்க்கையை ஏற்படுத்த வேண்டும் என்று ஐந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் சபிதா அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளி கல்வித்துறையின் மீளாய்வு கூட்டம் கோவையில் நேற்று நடந்தது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர், திண்டுகல் மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் கடந்த ஆண்டு பொது தேர்வில் 70 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வி முதன்மை செயலர் சபிதா தலைமை தாங்கினார்.பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் வரவேற்புரையாற்றினார், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலைவகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு கடந்த ஆண்டு பொது தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் பள்ளி கல்விதுறை அரசு முதன்மை செயலாளர் பேசியதாவது: அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் மிகவும் குறைந்துள்ளது. பிரைமரி பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் முன்வருவது இல்லை. வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்படி, இந்த மாதம் முதலே மாணவர்கள் கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் மாநிலங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திண்டுகல்லில் 12 பள்ளிகளின் பாத்ரூம் கதவு இல்லை, 15 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 347 பள்ளிகளில் குடிநீர் வசதியில்லாமல் உள்ளது. கோவையில் 40 பள்ளிகளில் பாத்ரூம் கதவு இல்லை, 100 பள்ளிகளில் உள்ள பாத்ரூம்களில் பீங்கான் வசதியில்லை, 120 பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாமல் உள்ளது. திருப்பூர், நீலகிரி மாவட்டத்திலும் இதே நிலைதான் உள்ளது. கரூர் மாவட்டத்தில் மட்டுமே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. எனவே, மற்ற நான்கு மாவட்டங்களிலும் கழிப்பிட வசதி பிரச்னையை விரைவில் முடிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் 20 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்த மாணவர்களுக்கு அரசு வழங்க வேண்டிய தொகையை குறித்து மத்திய அரசிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசு இரண்டு முறைகளில் தொகையை பள்ளிகளுக்கு வழங்க உள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரைமரி மற்றும் நர்சரி பள்ளிகளில் அங்கீகாரம் பெறாத பள்ளிகளாக கோவையில் 25 பள்ளிகள், கரூரில் 7 பள்ளிகள், நீலகிரியில் 18 பள்ளிகள் என 5 மாவட்டங்களையும் சேர்த்து 70 பள்ளிகள் வரும் ஏப்ரல் மாத இறுதியில் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டில் சேர்க்கை நடக்காது. அரசு பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் 70 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி பெற்ற பள்ளிகள்.
வரும்கல்வியாண்டில் 95 சதவீத தேர்ச்சியை அடைய வேண்டும் என்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தலைமை ஆசிரியர்கள் பொது தேர்வில் இலக்கை அடைய முயற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மேலும் பள்ளிகல்வி துறைகள் குறித்த பல்வேறு பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி செய்து இருந்தார்.

No comments:

Post a Comment


web stats

web stats