Sunday, 12 January 2014

அரசு பள்ளி மாணவர்களையும் 'சென்டம்' பெற வைக்க தீவிரம்: பழைய மாணவர்களின் விடைத்தாள்களை வழங்கி பயிற்சி

தனியார் பள்ளி மாணவருக்கு இணையாக, அரசு பள்ளி மாணவர்களும், 100 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக, கடந்த பொதுத்தேர்வில், 'சென்டம்' மதிப்பெண் பெற்றவர்களின் விடைத்தாள் வழங்கி, பயிற்சி அளிக்குமாறு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 10 வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வு, வரும், மார்ச் மாதம் துவங்க உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 10 வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கான அரைஆண்டு தேர்வு முடிந்து, செய்முறைத் தேர்வு, பருவத் தேர்வு, அலகுத் தேர்வு நடந்து வருகிறது. பெரும்பாலான அரசு பள்ளிகளில், 10 வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. கடந்த பல ஆண்டுகளாகவே, மாநில அளவில் நடத்தப்படும் பொதுத்தேர்வில், பெரும்பாலும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே, முதல் மூன்றிடத்தை பெற்று விடுகின்றனர். ரேங்க் பட்டியலில் இடம்பெறும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கிறது. அதனால், அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் குறைந்து இருப்பதாக, மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, அதிக மதிப்பெண்களை எடுப்பவர்களை மட்டும், பள்ளியில் சேர்ப்பது, தொடர்ந்து பலமுறை தேர்வு நடத்துவது உள்ளிட்டவைகளால், அதிக மதிப்பெண்களை எளிதில் பெற வைத்துவிடுகின்றனர்.
தேர்ச்சி விகிதம்:
ஆனால், அரசு பள்ளிகளில், அனைத்து வகையான மாணவர்களை யும் சேர்க்க வேண்டியுள்ளதால், தேர்ச்சி விகிதமும் குறைந்துவிடுகிறது. இதை தவிர்க்கும் வகையில், நடப்பாண்டில் முதல் மூன்று இடங்களுக்குள், அரசு பள்ளி மாணவ, மாணவியர் அதிகம் இடம்பெற வேண்டும் என்ற நோக்கில், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 10 வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களில், நன்கு படிப்பவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளித்து, பொதுத்தேர்வில், 'சென்டம்' எடுப்பதற்கான வழிமுறைகள் கூறப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கடந்த, மூன்று ஆண்டுகளில் நடந்த மார்ச் மாத பொதுத்தேர்வு, ஜூன் மாத உடனடி தேர்வு, அக்டோபர் மாத தனித்தேர்வு வினாத்தாள்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களில், 'சென்டம்' பெற்ற மாணவரின் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'கடந்த காலங்களில், பொதுத்தேர்வு வினாத்தாள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கி, தேர்வுக்கு தயார் செய்யப்பட்டது. தற்போது, பிளஸ்2 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு, முந்தைய தேர்வுகளில், 'சென்டம்' மதிப்பெண் பெற்ற, 22 வகையான விடைத்தாள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தேர்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற ஐடியா, மாணவர்களுக்கு கிடைக்கும். இதை அடிப்படையாக வைத்து, தேர்வுக்கு தயாராகும் போது, அவர்களால், அதிக மதிப்பெண்களை பெற முடியும். மேலும், 100 சதவீதம் மதிப்பெண் பெறுவது, தேர்வை எழுதும் வழிவகை, சிறுசிறு தவறை தவிர்ப்பது, ஒரு மதிப்பெண் குறைய காரணம் என்பது உள்ளிட்ட விரிவான தகவல்கள் வழங்கப்படுவதால், கடந்த ஆண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களை விட, அரசு பள்ளி மாணவர்கள் நடப்பாண்டில், அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைக்க அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats