மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை தளத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.மணலி அருகே உள்ள சடையன்குப்பம் பகுதியில், மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது.
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில், அப்பகுதியை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது.
கட்டிடத்தின் கூரையில் சிமென்ட் பூச்சு அவ்வப்போது பெயர்ந்து விழுந்து கொண்டிருந்தது. இதனால், மாணவர்கள் படிக்கவும், ஆசிரியர்கள் பாடம் நடத்தவும் அச்சப்பட்டு வந்தனர். தரமற்ற முறையில் வகுப்பறை கட்டிடம் கட்டியதால்தான் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது என பொதுமக்களும், மாணவ, மாணவிகளின் பெற்றோர்களும் குற்றம்சாட்டினர். மேலும், பழுதடைந்துள்ள கட்டிடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பலமுறை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, 8ம் வகுப்பு அறையில், கான்கிரீட் தளம் திடீரென பெயர்ந்து மாணவர்கள் மீது விழுந்தது.
இதில், ஆகாஷ் என்ற மாணவனுக்கும், சூரியகலா என்ற மாணவிக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த மற்ற மாணவர்கள் அங்கிருந்து வெளியே ஓடினர். உடனடியாக, பள்ளி ஆசிரியர்கள், படுகாயமடைந்த 2 பேரையும் மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சாத்தாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘தற்போது கூரை இடிந்து விழுந்துள்ள வகுப்பறை கட்டிடம், சில வருடங்களுக்கு முன்புதான் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதால், தற்போது கட்டிடம் இடிந்துள்ளது. பழுதடைந்துள்ள கட்டிடத்தில், மாணவர்கள் பாதுகாப்பற்ற முறையில் படித்து வருகின்றனர். எனவே, முறைகேடு செய்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment