மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலைக்கு உத்தரவாதம் கிடையாது என்ற சூழல் நிலவுவதால், மத்திய திட்டத்தின் கீழ், வேலையில் சேர்ந்த, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், பீதி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில், தமிழக அரசும், மவுனமாக இருப்பது, ஆசிரியர்களை, மேலும் கலக்கம் அடையச் செய்துள்ளது.
தொகுப்பூதியம்:
இரு ஆண்டுகளுக்கு முன், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர், அரசு பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். வாரத்திற்கு மூன்று அரை நாள் வேலை; மாதம், 5,000 ரூபாய் தொகுப்பூதியம் என்ற அடிப்படையில், இவர்கள், பணியாற்றி வருகின்றனர். அரசு வேலை, என்றாவது ஒரு நாள், பணி நிரந்தரமாகிவிடும் என்ற எண்ணத்தில், அதிக சம்பளத்தில் இருந்தவர்களும், அந்த வேலையை உதறிவிட்டு, பகுதிநேர வேலைக்கு வந்தனர். மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்ட நிதியின் கீழ், இவர்களுக்கு, சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், விரைவில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், தற்போதைய திட்டம், முடிவுக்கு வந்துவிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வேலை பறிபோகலாம் என்ற செய்தி கசிவதால், 16 ஆயிரம் பேரும், கலக்கம் அடைந்துள்ளனர்.
முகம் சுளிக்காமல்:
இந்த விவகாரத்தில், புதிதாக வரும் மத்திய அரசு கை விரித்தாலும், தமிழக அரசு, தாங்கள், பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, ஆசிரியரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில், தமிழக அரசு, மவுனம் காப்பதால், ஆசிரியர் மத்தியில், பீதி அதிகரித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் சங்க பொதுச்செயலர், கோவிந்தராஜு கூறியதாவது: வாரத்திற்கு, மூன்று அரை நாள் வேலை என்பது, கடித அளவில் தான் இருக்கிறது. முழு நேரமும், வேலை செய்கிறோம். தலைமை ஆசிரியர் தரும் அனைத்து வேலைகளையும், முகம்சுளிக்காமல் செய்கிறோம்.
நம்பிக்கையுடன்:
அரசு பணி என்பதால், மிகுந்த நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் வந்தோம். ஆனால், தொடர்ந்து வேலை செய்வோமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது. 'மத்தியில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், வேலையில் தொடர, வாய்ப்பு இல்லை' என, கூறுகின்றனர்.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகளும், வாய் திறக்க மறுக்கின்றனர். நாங்கள், தொடர்ந்து பணியாற்ற, தமிழக அரசு, வாய்ப்பு தர வேண்டும். எங்கள் பிரச்னையை, அமைச்சர் முதல், அதிகாரிகள் வரை, பலருக்கும் எடுத்துக்கூறி உள்ளோம். அதிக வயதை கடந்த நிலையில், குடும்பம், பிள்ளைகள் என்ற சூழலில் வசிக்கும் எங்களுக்கு, இந்த நேரத்தில், வேலையில் பிரச்னை ஏற்பட்டால், அதை தாங்கிக்கொள்ள முடியாது. மத்திய அரசு திட்டம் கைவிடப்பட்டாலும், நாங்கள் தொடர்ந்து பணியாற்றவும், பகுதிநேர வேலையை, முழுநேர வேலையாக மாற்றவும், தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கோவிந்தராஜு கூறினார்.
No comments:
Post a Comment